டெல்லி சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு ஒரே மேடையில் பொது விவாதத்தில் தன்னை எதிர்கொள்ள கிரண் பேடி தயாராக இருக்கின்றாரா என கெஜ்ரிவால் விடுத்துள்ள சவாலை கிரண் பேடி ஏற்றுக்கொண்டுள்ளார்.
கெஜ்ரிவால் விடுத்த சவாலுக்கு பதிலளித்துள்ள கிரண் பேடி, கெஜ்ரிவாலுடன் பொது விவாதத்திற்கு தயாராக இருப்பதாகவும், பாஜக மேலிடம் விரும்பினால் அது நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார். எனினும், அந்த விவாதம் சட்டசபையில் நடைபெற வேண்டும் என்றே தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபைத் தேர்தல் பெப்ரவரி 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளராக அர்விந்த் கெஜ்ரிவால் மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில், அவருக்கு எதிராக முதல்வர் வேட்பாளராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடியை பாஜக களமிறக்கியுள்ளது.
முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு கிரண் பேடிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள கெஜ்ரிவால், தேர்தலையொட்டி பொது விவாதத்திற்கு தயாரா என ட்விட்டரில் சவால் விடுத்துள்ளார். நடுநிலையாளர்கள் முன்னிலையில் பொது விவாதம் நடைபெற வேண்டும் என கெஜ்ரிவால் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மேலும், ட்விட்டரில் நீண்ட நாட்களாக தான் கிரண் பேடியை தொடர்ந்து வந்துள்ளதாகவும், ஆனால் தன்னை கிரண் பேடி தடை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ட்விட்டர் தடையை நீக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 Comments