இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்றைய தினம் திருப்பதி மற்றும் புத்தகயாவுக்கு செல்லவுள்ளார்.
அத்துடன், கலாசார முக்கியத்துவம் வாய்ந்த சில பகுதிகளுக்கும் ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளதாக டெல்லியிருந்து ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.
ஜனாதிபதி நேற்றிரவு இந்திய ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட விசேட இரவு விருந்துபசாரத்தில் கலந்துகொண்டுள்ளார்.
இந்த விருந்துபசாரத்தில் இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் கூறினார்.
ஜனாதிபதியுடன் இந்தியா சென்றிருந்த அமைச்சர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவும் இந்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
விருந்துபசாரத்தின் பின்னர் கருத்து வெளியிட்ட இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துடன், இலங்கையின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கும் வாழ்த்தியுள்ளார்.
இதற்கு தமது நன்றிகளை தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, இந்தியாவுடன் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்பட விரும்புவதாகவும் குறிப்பிட்டதாக டெல்லியிருந்து ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க மேலும் கூறினார்.

0 Comments