Ticker

6/recent/ticker-posts

யுத்தக்குற்ற விசாரணை அறிக்கை : தாமதப்படுத்தும் ஐ.நா

இலங்கை யுத்தக் குற்றச்செயல் விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் சமர்ப்பிப்பதனை கால தாமதிக்கும் யோசனையை மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைய்ன் ஆதரிப்பதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை சில மாதங்களுக்கு காலம் தாழ்த்துமாறு இலங்கை அரசாங்கம்
கோரியிருந்த நிலையிலேயே இந்த ஆதரவினை அல் ஹூசைய்ன் வழங்கியுள்ளார். புதிய விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் நோக்கிலேயே இலங்கை அரசாங்கத்தால் இவ்வாறு அவகாசம் கோரப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக கருத்துரைத்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், ‘எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 30ஆம் அமர்வுகள் வரையில் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை ஒத்தி வைக்கும் யோசனையை ஆதரிக்கின்றேன். இலங்கை நிலைமைகளின் மாற்றம் மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை காலம் தாழ்த்துவது நியாயமானது என கருதுகின்றேன்’ என்றார்.
அறிக்கை சமர்ப்பிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இறுதி தீர்மானம் எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது. எனினும் ஆணையாளரின் நிலைப்பாடு தீர்மானங்களில் முக்கிய தாக்கத்தை செலுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யுத்தக்குற்றம் தொடர்பிலான விசாரணைகளை உரிய முறையில் நடத்துவதற்கு இலங்கையின் புதிய அரசாங்கம், அது பதவியேற்றதில் இருந்து 100 நாட்களுக்குள் திட்டமிட்டிருப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அறிவித்திருக்கின்றார். இவ்விடயத்தையும், ஆணையாளர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இதேவேளை, அல் ஹூசைய்னை இலங்கைக்கு வருமாறும் மங்கள அழைத்திருக்கின்றார். அத்துடன், முன்னைய மஹிந்த அரசாங்கத்தில் தடைசெய்யப்பட்டிருந்த அனைத்து இணைய ஊடகங்களுக்கான தடைகளும் இலங்கையில் நீக்கப்பட்டுள்ளதாக மங்கள குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கம் பதவியேற்று ஒரு மாதங்கள் தான் ஆகின்றது. இந்நிலையிலும், மக்களின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை உறுதிப்படுத்தும் விதத்தில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து மக்களின் உரிமைகளுக்கும் மதிப்பளிக்கப்படுகிறது. சர்வதேச சமூகத்தால் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றும் மங்கள சமரவீர ஐ.நா. ஆணையாளருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா.வின் 2011ஆம் ஆண்டு அறிக்கையின் படி இறுதி யுத்தத்தின் போது, இறுதி வாரத்தில் மட்டும் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் போர் நிறைவுக்கு வந்தது என்றும், அதனை இலங்கை இராணுவத்தினரே நிகழ்த்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததை முக்கியமானதாகும்.

Post a Comment

0 Comments