வெள்ளை வான் ஆட்கடத்தல்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படுமாயின் சாட்சியம் வழங்கத் தான் தயார் என முன்னாள் பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
அதேவேளை கடந்த ஆட்சிக் காலத்தில் தொடர்ந்த வெள்ளை வான் ஆட்கடத்தல் கலாசாரத்துடன் இராணுவம் உட்பட முப்படையின் உயர் அதிகாரிகள் சிலருக்கு நேரடிதொடர்பிருப்பதாகவும் பிரஷாந்த ஜயகொடி சுட்டிக்காட்டியுள்ளார்.
வெள்ளை வான் ஆட்கடத்தல்களுக்கும் பொலிஸ் அதிகாரிகள் தொடர்புபடவில்லை என்று அடித்துக் கூறும் அவர், இராணுவம், கடற்படை உட்பட படை அதிகாரிகளும், அவர்கள் தலைமையிலான குழுவுமே இந்த நடவடிக்கைகளில் நேரடியாக தொடர்புபட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
அத்துடன் இந்த வெள்ளை வான கலாசாரம் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தப்படுமாயின் தான் நேரடியாக ஆஜராகி சாட்சியமளிப்பேன் என்றும் சூளுரைத்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது கைக்கூழிகளால் தனக்கு விடுக்கப்பட்ட அரசியல் அழுத்தங்கள் மற்றும் கொலை அச்சுறுத்தல்களை அடுத்து அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்ததாக குறிப்பிட்ட முன்னாள் பொலிஸ் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரஷாந்த ஜயகொடி, ஒருவருடமும், ஏழு மாதங்கள் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த நிலையில் இன்றைய நாடு திரும்பியுள்ளார்.
இதனையடுத்து கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற வெள்ளை வான் ஆட்கடத்தல்கள் தொடர்பில் சாட்சியமளிக்கத் தயார் என்ற இந்தத் தகவல்களை கூறினார்.
புதிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதும் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அடுத்து தனக்கு பாதுகாப்பு இருக்கும் என்ற நம்பிக்கை காரணமாகவே நாடு திரும்பியதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தரப்பினர் எவரும் தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், படை அதிகாரிகள், கரோக்கி போன்ற இரவு களியாட்ட விடுதிகளை நடத்திவரும் வர்த்தகர்கள், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இரவு விடுதி உரிமையாளர்கள், முதலமைச்சர்கள், எம்பி.க்கள் ஆகியோர் தனக்கு தொடர்ச்சியாக கொலைமிரட்டல் விடுத்ததாலேயே தனக்கு குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோர நேரிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்த ஜனவரி 9 ஆம் திகதி அதிகாலை அலரி மாளிகையில் இடம்பெற்ற இராணுவ சதி புரட்சி தொடர்பிலான விசாரணைகளை புதிய அரசாங்கம் காலம்தாழ்த்தி வருவது குறித்தும் முன்னாள் பொலிஸ் பேச்சாளர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
0 Comments