தனியார் பாதுகாப்பு நிறுவனமான அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தினால் இன்று மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
காலி துறைமுகத்தில் கண்டறியப்பட்ட மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் காரணமாக அவருக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டாமென குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவருக்கு நைஜீரியாவிற்கு வருமாறு அழைப்பொன்று விடுக்கப்பட்டுள்ளதாக, பிரதிவாதி சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி துலிந்த வீரசூரிய குறிப்பிட்டார்.
நிஸ்ஸங்க சேனாதிபதி நைஜீரியாவிற்கான சுற்றுப் பயணத்தில் ஈடுபடாவிட்டால், சுமார் மூவாயிரத்து 500 மில்லியன் டொலர் வருமானத்தை இலங்கை இழப்பதற்கு நேரிடும் எனவும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குவது குறித்து பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியன தனித்தனியே கடிதங்கள் அனுப்பியுள்ள போதிலும், அதுதொடர்பில் சட்ட மாஅதிபர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

0 Comments