இந்திய நாட்டுக்காக உயிரிழந்தவரும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரருமான பகத் சிங், மற்றும் அவரது கூட்டாளிகள் தூக்கிலிடப்பட்ட தினமான மார்ச் 23-ஆம் தேதியை தேசிய தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சி முகநூல் (ஃபேஸ்புக்) தளத்தில் வெளியிடப்பட்டுள்ள 50 வினாடிகள் கொண்ட விடியோ பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நம் நாட்டின் விடுதலைக்காக தன் உயிரைத் தியாகம் செய்த பகத்சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் உயிரிழந்த தினமான மார்ச் 23-ஆம் தேதியை, நாம் அனைவரும் தேசிய நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும். நம் நாட்டின் நலனைக் காக்க உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும் தேச ஒற்றுமைக்காக நாம் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் முகநூல் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை பதிவு செய்யப்பட்ட இந்த விடியோ பதிவை சுமார் 38,000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இதேபோல தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான குமார் விஸ்வாஸ், ஆசுதோஷ், எச்.எஸ்.புல்கா, சஞ்சய் சிங் உள்பட பலர் இதுபோன்ற விடியோ பதிவுகளில் தனித் தனியாகத் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது லாலா லஜபதிராயின் உயிரிழப்புக்குக் காரணமான பிரிட்டிஷ் காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற காரணத்துக்காக பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூன்று பேரும் பாகிஸ்தானின் லாகூர் சிறையில் 1931, மார்ச் 23-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.

0 Comments