இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து விரும்பினால் அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லட்டும் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "முஸ்லிம்கள் இத்தேசத்தில் இருந்து ஏதாவது விரும்பினார்கள் என்றால் முதலில் அவர்கள் இந்தியாவை தாய்நாடாக மதிக்க வேண்டும். வந்தே மாதரம் என முழங்க வேண்டும். அவர்களுடைய மதத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டே இந்தியாவில் சலுகைகளை எதிர்பார்க்கக்கூடாது. அப்படி சிறப்பு அந்தஸ்து விரும்பினால் அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லட்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் உவாய்ஸி நேற்று முன்தினம் (மார்ச் 1-ல்) நாக்பூரில் பேசியபோது, மகாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சாம்னாவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "முஸ்லிம்கள் நிறைய பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாகவே அவர்களுக்காக நான் பேசுகிறேன் என உவாய்ஸி கூறியிருக்கிறார். அப்படியென்றால் அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் தாக்குதலால் எத்தனை இந்துக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதை அவரால் மறுக்க முடியுமா. உவாய்ஸியின் பேச்சு, வெறுப்புப் பிரச்சாரமாக கருதப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்" என்றும் சிவசேனாவின் சாம்னாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments