சென்னையில் உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் மீது மர்ம நபர்கள் சிலர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை மூன்றேகால் மணியளவில் இந்த தாக்குதல் நடந்தது. அலுவலகத்தினை நோட்டமிட்டபடி, இரு சக்கர வாகனங்களில் சென்ற சிலர், சில நிமிடங்களில் திரும்பி வந்து, நுழைவுவாயிலின் அருகே நின்றனர். பின்னர் அடுத்தடுத்து இரண்டு குண்டுகளை வீசினர். இந்த குண்டுகள் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் வெடித்தன.
இதுகுறித்து உடனடியாக கிண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தடயங்களை சேகரித்தனர். இந்த தாக்குதலில் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
குண்டு வீச்சு தொடர்பாக விசாரிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தனிப்படை பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். வெடிகுண்டு வீச்சு தொடர்பாக உளவு அமைப்பினரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோல் சட்ட பஞ்சாயத்து இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 08.03.2015 ஞாயிற்றுக் கிழமையன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊழியர்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய நிலையில் இன்று வெடிகுண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கும் பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

0 Comments