உலகின் முதல் சோலார் விமானம் இந்தியா, குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்தில் இறங்கியது. சோலார் இம்பல்ஸ் 2 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விமானம் அபுதாபியில் 9ந்தேதி தனது பயணத்தை தொடங்கியது. இந்த விமானத்தில் ஒருவர் மட்டுமே அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த ஆண்ட்ரே போர்ஷ்பர்க் விமான ஓட்டுனராக தொடங்கியுள்ள இந்தப் பயணத்தின் இரண்டாம் கட்டத்தில் பேர்ட்ராண்ட் பிக்கார்ட் விமான ஓட்டுனராக பயணிப்பார். உலகின் பல்வேறு நாடுகளை கடந்து, மரபுசாரா எரிசக்தி மற்றும் ஆற்றல் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பயணத்தை தொடங்கியுள்ள இந்த விமானம், கடந்த 12 ஆண்டு கால ஆய்வில் உருவானதாகும்.
முன்னதாக (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) அபுதாபியில் புறப்பட்ட இந்த விமானம் ஓமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டிற்கு 12 மணி நேரத்தில் சென்றது. பின்னர்அங்கிருந்து புறப்பட்ட விமானம், 16 மணி நேர பயணத்திற்கு பின் 10-ந்தேதி இரவு 11.25 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தை ஓட்டி வந்த பேர்ட்ராண்ட் பிக்கார்ட்டை குஜராத் மாநில தலைமை செயலர் டி.ஜே .பாண்டியன் வரவேற்றார். அப்போது, பேசிய பிக்கார்ட் தனது இந்திய பயணம் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
இங்கு 2 நாட்கள் ஓய்வு எடுக்கும் விமானிகள், பின்னர் வாரணாசி செல்கின்றனர். அங்கு கங்கை நதியின் மேல் பயணிக்கும் விமானம், தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதன் பின்னர், மியான்மர், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு விமானம் பயணிக்கிறது. மொத்தம் 12 இடங்களில் தரையிறங்கும் இம்பல்ஸ், இறுதியில் தான் புறப்பட்ட அபுதாபியிலேயே வந்தடைகிறது. தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட இந்த விமானத்தின் 72 மீட்டர் நீள இறக்கைகளில் 17,248 சோலார் செல்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்த சோலார் விமானத்தை எரிபொருள் உதவி இல்லாமல், முற்றிலும் சூரிய ஒளி மூலம் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்னர் இது போன்ற சூரிய சக்தியால் இயங்கும் விமான முயற்சிகள் வெற்றிப்பெறிருந்தாலும், உலகைச் சுற்றி வர எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி அனைவராலும் எதிர்பார்ப்புமிக்க முயற்சியாக பார்க்கப்படுகிறது. சோலார் இம்பல்ஸ் – 1 விமானத்தை விட சோலார் இம்பல்ஸ் – 2 விமானம், அளவில் பெரியதாகவும், மேம்படுத்தப்பட்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள ஆற்றல்மிக்க லித்தியம் ஐயன் பெட்டரிகள் அந்த விமானம் இரவு நேரத்திலும் பறக்கப் பயன்படுகிறது.

0 Comments