உயிரைப் பணயம் வைத்து நல்லாட்சிக்கு வழிசமைத்தோம். யார் யாரையெல்லாம் தூக்கியெறிய வேண்டுமென்று மக்கள் நினைத்தார்களோ அவர்கள் இன்றைய தேசிய அரசாங்கத்தின் நல்லாட்சியில் அமைச்சர்களாக இருக்கின்றனர்.
கால்வாய் வெட்டியவன் நான். ஆனால் தண்ணீர் குடிப்பதோ வேறு ஒருவர் என்று ஆளுங்கட்சி எம்.பியான ஹுனைஸ் பாரூக் பாராளுமன்றத்தில் ஆதங்கம் வெளியிட்டார். எவ்வளவு விரைவாக இப்பாராளுமன்றத்தைக் கலைக்க முடியுமோ அவ்வளவு விரைவாக கலைத்து தேர்தல் நடத்தி நேர்மையானவர்கள் தெரிந்தெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் அவ்வாறானவர்களையே அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட வேண்டுமே தவிர மோசடியினர்களை அல்ல என்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற உள்நாட்டு திறை சேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஹுனைஸ் பாரூக் எம்.பி இங்கு மேலும் கூறுகையில், நல்லாட்சி ஒன்றை ஏற்படுத்துவதற்காக நாம் உயிரைப் பணயம் வைத்து உழைத்தோம். இதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து விலகி முதலாவதாக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட முஸ்லிம் உறுப்பினராக இருக்கின்றேன். 82 நாட்கள் கடந்துள்ள இந்நல்லாட்சி அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் ஐந்து தடவைகளாக இங்கு ஆசன மாற்றம் ஏற்பட்டு விட்டது. இங்கு ஆசனங்களைத் தேடி சங்கீதக்கதிரை ஓட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
0 Comments