"வரலாறு என்பது எப்போதும் வெற்றியாளர்களால் எழுதப்படுவது" என்பார்கள். ஆனால், ஹோவர்ட் சின் எழுதிய அமெரிக்க வரலாறு அப்படியானதல்ல. வரலாற்றை அதிகாரச் சிம்மாசனங்களில் அமர்ந்திருப்பவர்களின் பார்வையில் அணுகாமல், அடக்கப்பட்ட மக்களின் கண்ணீரோடும் போராட்டத்தோடும் பதிவு செய்தவர் அவர். இப்புத்தகம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு அறிவுப்பூர்வமானத் தாக்குதல் என்று துணிந்து கூறலாம்.
அமெரிக்க அதிகாரத்தின் பிடியிலும், அக்கிரமத்தின் நிழலிலும் புதைக்கப்பட்ட உண்மைகளைப் பற்றி இந்தப் புத்தகம் பேசுகிறது. வழக்கமான வரலாற்றுப் புத்தகங்கள் வெற்றிக் கதைகளைப் பாடும்; ஆனால் சின்னோ, அந்த வெற்றிகளின் பின்னணியில் மறைந்துள்ள ரத்தத்தையும் துரோகத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.
கொலம்பஸின் வருகையை ஒரு 'கண்டுபிடிப்பு' என்று உலகம் கொண்டாடியபோது, அதனை மண்ணின் மைந்தர்களான பழங்குடியினர் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான ஆக்கிரமிப்பு என்று வர்ணித்தார் ஹோவர்ட் சின்.
தன்னை ஒரு ஜனநாயக நாடு என்று உலகிற்கு அறிமுகப்படுத்திக்கொள்ளும் அமெரிக்கா, உண்மையில் ஏகாதிபத்தியத்தின் நிஜ முகத்தை ஜனநாயக முகமூடியால் மறைத்துச் செயல்படுகிறது.
சின் அமெரிக்காவை ஒரு 'ஏகாதிபத்திய அரசு' (Empire) என்றே வரையறுக்கிறார். இன்று உலக அரங்கில் நடக்கும் அராஜகங்களை அன்றே சின் துல்லியமாகக் கணித்துள்ளார்.
சின்னின் கருத்துப்படி, வரலாறு ஒருபோதும் நடுநிலையானது அல்ல. "ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் நீங்கள் நடுநிலையாக இருக்க முடியாது" (You can't be neutral on a moving train) என்பது அவரது புகழ்பெற்ற வாதம்.
அநீதி இழைக்கப்படும்போது மௌனம் காப்பது, அநீதியாளனுக்குத் துணை நிற்பதற்குச் சமம். ஆட்சியாளர்கள் சொல்லும் வரலாறு என்பது உண்மைகளை மறைக்கும் திரை என்பதை அவர் உரக்கச் சொன்னார்.
1980-களில் வெளிவந்த இந்த நூல், பல தசாப்தங்கள் கடந்தும் இன்றைய அராஜகங்கள் நிறைந்த சூழலுக்கு எப்படிப் பொருந்துகிறது என்பதைச் சொல்லவே இந்த நூலை நினைவூட்டினேன்..
மனிதாபிமானம் எனும் போலி முகத்தோடு ஈரானிலும், வெனிசூலா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் அமெரிக்கா தலையிடுவதற்குச் சொல்லும் "மனித உரிமைகள்" மற்றும் "ஜனநாயகம்" போன்ற காரணங்கள் வெறும் கண்துடைப்பு. அதன் உண்மையான இலக்கு அந்த நாடுகளின் எண்ணெய் வளங்களைக் (Oil) கொள்ளையிடுவதே ஆகும்.
ஈரானில் மனித உரிமை மீறப்படுவதாகக் கூக்குரல் எழுப்பும் அதே அமெரிக்கா, காஸாவில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இஸ்ரேலால் கொல்லப்படும்போது, அதற்குத் தேவையான ஆயுதங்களையும் நிதியையும் அள்ளி வழங்கி அந்த படுகொலைகளுக்கு ஆதரவு வழங்குகிறது.
1953-ல் ஈரானின் பிரதமர் முஹம்மது மொசாதிக்கின் (Mossadegh) ஆட்சியைச் சதி செய்து கவிழ்த்தது அமெரிக்கா. ஷா பஹ்லவி என்ற அடிவருடியை மன்னனாக்கி ஆட்சியில் அமர்த்தியது.
ஈரானிலிருந்த வெளிநாடுகளுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களை அரசுடைமை ஆக்கியதே மொசாத்திக் செய்த 'குற்றம்'. 1979 ஈரானிய மக்கள் புரட்சியின் பின்னர், அமெரிக்க கைக்கூலியான மன்னர் ஷா துரத்தப்பட்டார்.
கடந்த ஐந்து தசாப்தங்களாகப் பொருளாதாரத் தடைகள் மூலம் அந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அமெரிக்கா சிதைத்து வருகிறது.
ஈராக், சிரியா மற்றும் லிபியா என அமெரிக்கா காலடி வைத்த இடமெல்லாம் இடுகாடுகளாயின. ஒரு நாட்டை விடுவிப்பதாகக் கூறிச் செல்லும் அமெரிக்கா, வளங்களைச் சூறையாடிவிட்டுத் தனக்குச் சாதகமான ஒரு 'பொம்மை ஆட்சியை' (Puppet Government) நிறுவுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் போர் வியாபாரமும், புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரலுமே மத்திய கிழக்கை ஆதிக்கம் செய்கிறது. உலகில் எங்காவது போர் நடந்தால் மட்டுமே அமெரிக்காவின் பெரும் ஆயுத நிறுவனங்கள் லாபம் ஈட்ட முடியும். ஒரு போர் முடியும்போது, மற்றொன்றைத் தொடங்க அமெரிக்கா ஒரு புதிய 'எதிரியை' உருவாக்குகிறது.
மத்திய கிழக்கில் தனது பிடியைத் தக்கவைத்துக் கொள்ள 'மத தீவிரவாதம்' எனும் ஆயுதத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது.
இஸ்ரேலை அதரிக்கும் அரபு நாட்டு மன்னர்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பை வழங்குகிறது. இஸ்ரேலை எதிர்க்கும் நாடுகளின் ஆட்சிகளைக் கவிழ்த்துத் துவம்சம் செய்கிறது. இந்த அராஜகத்தை ஜனநாயக மீட்பு என்று அமெரிக்கா அர்த்தப்படுத்துகிறது.
எரிசக்தி மற்றும் புவிசார் அரசியலில் தனது மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளவே மத்திய கிழக்கை அமெரிக்கா ஒரு ஆடுகளமாக பாவித்து வருகிறது.
அமெரிக்க நலன் காக்கும் அரபு மன்னர்களின் ஒத்தாசையுடன் மத்திய கிழக்கை ஒரு போர்க்களமாகவே அமெரிக்கா இயங்கு நிலையில் வைத்துள்ளது.
13.01.2026
10.30am

0 Comments