(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சட்டத்தையும் நீதியையும் நிலை நாட்டுமாறு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். அவ்வாறு செய்யத்தவறின் அரசியலிலிருந்து வெளியேறி ஒரு குழுவாக இயங்கிப் போராடுங்கள் என முஸ்லிம் முற்போக்கு முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக விடுத்து வரும் அச்சுறுத்தல் தொடர்பாக முன்னணயின் செயலதிபரும் முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சருமான ஏ.எச்.எம். அஸ்வர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,
அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் இன்று ஒரு பெரும் சன்மார்க்கக் கடமையுண்டு. ஒட்டு மொத்தமாக ஒன்று சேர்ந்து நீங்கள் பதவிக்கு கொண்டு வந்த ஜனாதிபதி, பிரதமரிடம் முறையிடுங்கள். சட்டத்தை உடன் அமுல்நடத்துமாறு வற்புறுத்துங்கள். அது நிச்சயம் பயனளிக்கும். இன்றேல் -
அரசியலிலிருந்து வெளியேறி ஒரு குழுவாக இயங்கிப் போராடுங்கள். அல்லாஹ்வின் அருளும் அண்ணலாரின் அன்பும் உங்களை அணைக்கும். ஆலம் எல்லாம் படைத்து பரிபாலிக்கின்ற ரப்புல் ஆலமீன் மீது வசைபாடும் ஒருவரும் உலகத்தில் இருந்ததாக வரலாறு இல்லை. ஆது மகன் சத்தாதும், பிர்அவ்னும், நம்ரூத்தும் அழித்தொழிந்த படலத்தை பொது பலசேனாவுக்கு ஞாபகமூட்டுவது நம்கடமை. ஏக அல்லாஹ் ஜல்ல ஜலாலஹுத்தஆலாவை உலகில் எக்காலத்திலும் எவரும் சொல்லாத மகாபாதமா சொற்களைப் பாவித்து இழிவு செய்த கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஏற்படும் முடிவு மிக மிக பயங்கரமானதாக இருக்கும் என்பது திண்ணம்.
“ஒங்கட அல்லாஹ்விடம் கேளுங்கள்” என்கிறார்.
ஆம். நிச்சயமாக நாம் முஸ்லிம்கள். அல்லாஹ்விடம்தான் கேட்போம். அல்லாஹ்வே! முஸ்லிம்களைக் காப்பாற்று என்று இரவு பகல் துஆச் செய்கின்றேன். எமது முஸ்லிம்கள் பள்ளிவாசல்கள் தோறும் வீடுகளிலும் தாய்க்குலம் குனூத் ஓதி இன்று துஆச் செய்கின்றனர். ஈமானின் மீது ஆணையாக அது பழிக்கும் என்பதை கலகொட அத்தே ஞானசார தேரர் உணர வேண்டும்.
இன்னொன்றும் சொல்ல வேண்டும். எமது நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்கள் நூற்றுக்கு 99.92 இந்த தேதரின் நடத்தையை அங்கீகரிப்பதில்லை. மகாநாயக்க தேரர்களும் அங்கீகரிப்பதில்லை. சிங்கள மக்களின் நன்மதிப்பைப் பெற்று முஸ்லிம்கள் நாடு பூராகவும் அவர்களோடு சிநேகபூர்வமாக வாழ்கின்றனர் என்பதுதான் உண்மை.
எனவே நாட்டை ஆளும் இந்த அரசு உடன் செயலில் இறங்கி அட்டகாசம் புரிவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு புதிய யாப்பு ஒன்றும் தேவையில்லை.
தற்போதைய அரசியல் காலத்தின் 10,14(1) (e) பிரிவின்படி கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யலாம் செய்வீர்களா? என்றும் கேள்விக் கணையோடு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments