Ticker

6/recent/ticker-posts

அரச பயங்கரவாதம் கோலோச்சிய அந்த மெய்சிலிர்க்கும் 80களின் காலத்தை திரைக்கு கொண்டு வந்துள்ள "ஃபாதர்" (ෆාදර්) திரைப்படம்!


 🔴👉அரச பயங்கரவாதம் கோலோச்சிய அந்த மெய்சிலிர்க்கும் 80களின் காலத்தை திரைக்கு கொண்டு வந்துள்ள "ஃபாதர்" (ෆාදර්) திரைப்படம்!

இலங்கை அரசியலின் இரத்த வாடை வீசும் கருப்புப் பக்கங்களை, உருகி உறைந்துபோன குருதிச் சுவடுகளின் வழியை மீளாய்வு செய்கிறது இயக்குநர் சமிந்த ஜயசூரியவின் படைப்பான “ஃபாதர்” (Father) சிங்கள திரைப்படம்.

அண்மையில் நடைபெற்ற இதன் ஊடகக் காட்சி, சிங்கள சினிமா ஒரு புதிய பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டதை உரக்கச் சொல்லியுள்ளது. சமூக ஊடகங்களில் ஃபாதர் ෆාදර් தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கருத்தாடல்களிலிருந்து இதை புரியக் கூடியதாக இருக்கிறது.
வரலாற்றின் கொடிய வடுக்களானது தான் இலங்கை அரசியலின் 70 -80 களின் காலப்பகுதி. இரத்த வாடை வீசிய இந்தக் காலம் வெறும் காலச்சக்கரம் சுழன்றதற்கான காட்சி மட்டுமல்ல; அது இலங்கையை வன்முறை கோலோச்சிய ஒரு பூமியாக இந்த உலகிற்கு அடையாளப்படுத்திய முக்கிய சாட்சியுமாகும்.

ஐதேக ஆட்சியில் 1983ம் ஆண்டு தமிழா்களுக்கு எதிராக இடம்பெற்ற ஜுலைக் கலவரம், ஜேவிபியின் இரண்டாம் கிளர்ச்சியின் 88, 89 காலப்பகுதியில் இடம் பெற்ற, மிகவும் பேசப்பட்ட கம்பஹ “வவுல்கெலே படுகொலை” (වවුල්කැළේ ඝාතන) போன்ற இரத்தக்கறை படிந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட பேரவலம், தமிழர்களுக்கு எதிரான 1983-இன் கறுப்பு ஜூலை கலவரங்கள் மற்றும் தெற்கில் இளைஞர் கிளர்ச்சியைத் தொடர்ந்து விளைந்த மெய்சிலிர்க்கும் படுகொலைகள் என அந்தத் தசாப்தத்தின் இருண்ட வரலாற்றை அசாத்தியத் துணிச்சலுடன் தொட்டுச் செல்கிறது இந்த “ஃபாதர்” திரைப்படம்.

ஊடகவியலாளர் Tharindu Uduwaragedara ஃபாதர் திரைப்படத்தின் இயக்குநர் சமிந்த ஜயசூரியவுடனான ஒரு நேர்காணலை தனது සටහන් Satahan Radio Entertainment யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அந்த நேர்காணலை பார்த்ததன் பின்னர் இது தொடர்பாக எழுத வேண்டும் என நினைத்தேன்.

பேரினவாதம் எரித்து, கரித்துத் துப்பிய, உலக மக்களின் நெஞ்சைப் பதற வைத்த யாழ் நூலக எரிப்பு சம்பவத்தை இந்த திரைப்படம் தொட்டுச் செல்கிறது.

"அன்று யாழ்ப்பாண நூலகத்தை எரிப்பதற்காகக் கொழும்பிலிருந்து குண்டர்களை ஏற்றிச் சென்ற அதே பேருந்து வண்டியைத் தேடிப்பிடித்து, இந்தத் திரைப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறோம்" என்று இயக்குநர் சமிந்த ஜயசூரிய கூறுகிறார்.
இலங்கையில் அரச பயங்கரவாதம் கோலோச்சிய 1989 காலப்பிரில் கம்பஹா வவுல்கெலே பகுதியில் ஒரு கூட்டுப்படுகொலை அரங்கேறியதை மறந்திருக்க மாட்டோம்.

இந்த வவுல்கெலே படுகொலைகளின் சூத்திரதாரியாகக் கருதப்பட்ட வீரகுல காவல் நிலையப் பொறுப்பதிகாரி தம்மிக என்பவர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். இந்த பொலிஸ் அதிகாரி தம்மிக்கவை நீதிமன்றத்திற்குள்ளேயே வைத்து சுட்டுக்கொன்றுவிட்டு, நீதவானுக்கு தலைவணங்கி மரியாதை செய்துவிட்டுத் தப்பியோடிய 'கம்பஹா ஒஸ்மன்' என்பவரின் உண்மைக்கதையை மையமாக வைத்தே இப்படத்தின் திரைக்கதை சுழலுகிறது.

சட்டத்திற்கும் தர்மத்திற்கும் இடையிலான அந்த மெல்லிய கோட்டை இந்தப் படம் தத்ரூபமாகப் பேசுகிறது. (ஜப்பான் நாட்டுக்கு தப்பியோடிய கம்பஹ ஒஸ்மன் பின்னர் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டு குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது மேலதிக தகவல்).
இலங்கையின் ஆகச்சிறந்த 100 கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு, விருதுகள் வென்ற விஸ்வஜித் கருணாரத்ன ஒளிப்பதிவு செய்துள்ளார். சிந்தக ஜயகொடி மற்றும் அமித் குரு ஆகியோர் இசை அமைத்துள்ளனர். மேலும், பிரபல பாடகர் சாமர வீரசிங்க தனது 25 ஆண்டுகால இசைப் பயணத்தில் முதல் முறையாகத் திரையிசைப் பாடலைப் பாடியிருப்பது இப்படத்தின் மற்றுமொரு சிறப்பு.

வர்த்தக ரீதியிலான மசாலா திரைப்படங்களுக்கு மத்தியில் மிகவும் பேசப்படுகின்ற கருத்தாழமான, கலைத்துவமான சிங்களத் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.
சிங்கள திரையுலகில் ஒரு புதிய வசந்தத்தைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படும் "ஃபாதர்", எதிர்வரும் 2026 ஜனவரி 9-ம் திகதி திரையரங்குகளுக்கு வரவிருக்கிறது. இலங்கை மட்டுமல்லாது, உலகெங்கிலும் உள்ள 25 நாடுகளில் ஒரே நேரத்தில் இப்படம் திரையிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அஸீஸ் நிஸாருத்தீன்
29.12.2025
9.40am
Photo credits: @Pasindu Weerarathna

Post a Comment

0 Comments