“எமது நாட்டின் அரசியலமைப்பின்படி, இறையாண்மை என்பது, மக்களிடமே உள்ளது; பாராளுமன்றத்திடம் இல்லை. மக்கள் தமது இறையாண்மையை வெளிப்படுத்தக்கூடிய வழி, வாக்களிப்பு மூலமே ஆகும். ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரையும், இவ்விடயங்கள் குறித்துக் கவனமாக ஆராயுமாறு வேண்டுகிறேன்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஜனநாயகம், நிலையற்ற வடிவில் காணப்படுகிறது எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, அதை நிலைப்படுத்துவதற்கான ஒரே வழி, பொதுத் தேர்தலே ஆகும் என்றும் கூறியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் ஆற்றிய உரையின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், சர்ச்சைக்குரிய விதத்தில் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்காத நிலையிலும் கூட, பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு மறுத்து வருகிறார். அவரது நேற்றைய உரை தொடர்பான அறிக்கையும், பிரதமர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பிலேயே வெளியிடப்பட்டது.
பாராளுமன்றத்தைக் கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கெதிராக, உயர்நீதிமன்றத்தின் உதவியை, மஹிந்த - மைத்திரி கூட்டணியின் பிரதான எதிரணியான ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட தரப்புகள் நாடியுள்ள நிலையில், அவற்றின் செயற்பாடுகளை, பெயர் குறிப்பிடாமல், ராஜபக்ஷ விமர்சித்தார்.
“ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை நடத்துவதற்கெதிராக, அரசியல் கட்சிகள் போராடுகின்றமையை, இலங்கையில் மாத்திரம் தான் நீங்கள் காணலாம்” என விமர்சித்த அவர், ஏற்கெனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி, அரசியலமைப்புக்கு ஏற்பவே வெளியிடப்பட்டது எனவும், அவ்வர்த்தமானிப்படி அனைத்தும் நடைபெற்றிருந்தால், வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்திருக்கும் எனவும் தெரிவித்தார். “அதன்படி விடயங்கள் நடைபெற்றிருந்தால், இந்நாட்டில், நிலையான தன்மை மீளக் கொண்டுவரப்பட்டிருக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் 9 மாகாண சபைகளில், 6 மாகாண சபைகள் தற்போது செயற்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், போரால் பாதிக்கப்பட்ட, வடக்கு, கிழக்கு மாகாண சபைகளில், போர் முடிவடைந்ததும் தேர்தல்களை நடத்தியதாகவும், ஆனால் இப்போது போரில்லாத நிலைமையிலும், அவ்விரு மாகாணங்களில் மாகாண சபைகள் செயற்படவில்லை எனவும், முன்னைய அரசாங்கத்தை விமர்சித்தார்.
அரசியலமைப்பின் 19வது திருத்தம் மூலமாக, விரும்பிய நேரத்தில் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரம் பறிக்கப்பட்டது என்றே, ஐ.தே.முவும் சட்ட நிபுணர்களும் கூறிவருகின்ற நிலையில், அதை அவர் நிராகரித்தார். இலங்கையின் ஜனாதிபதிப் பதவி, நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டது எனத் தெரிவித்த அவர், நிறைவேற்று அதிகாரங்களை இல்லாது செய்வதற்கு, சர்வஜன வாக்கெடுப்பு மூலமாக, மக்களின் ஆணையைப் பெற வேண்டுமென உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் வழங்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.4tamilmedia.com
0 Comments