ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சரத்பொன்சேகா மற்றும் பாலித தேவரபெரும ஆகியோருக்கு இடையில் உருவாகியிருக்கும் சச்சரவை நிறுத்துமாறு பிரதமர் ரணில்விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
சரத்பொன்சேகா மற்றும் பாலித தேரபெரும ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி ஊடகங்களுக்கு சூடான செய்திகளை வழங்கி வருகின்றனர். இந்த செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என இருவருக்கும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
காகம் தலையில் எச்சமிட்டது என்பதற்காக காகங்களை சுட்டுக் கொல்லச் சொன்ன பொன்சேகா, அப்பத்தை ஒழுங்காக சுடவில்லையென சிப்பாய்களை முழந்தாளிடச் செய்த பொன்சேகா, வெள்ளைக்கொடி விவகாரத்தில் காட்டிக்கொடுத்த பொன்சேகா என்னை இழிவாக பேசுவதா? என பாலித தேவரபெரும நேற்று ஊடகங்கள் முன்னிலையில் கேள்வி எழுப்பினார்.
மூளை இல்லாவிடில் உடம்பை பெரிதாக வைப்பதில் அர்த்தமில்லை, கடற்படையில் சாரதியாக இருந்து தப்பியோடியவர் தான் இந்த தேவரபெரும,. இப்படியானவர்களை அரசியலுக்கு வரவிடக் கூடாது என சரத் பொன்சேகா ஊடகங்கள் முன்னிலையில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு இருவரும் மாறிமாறி பரஸ்பர குற்றச் சாட்டுக்களை முன்வைத்து வருவது ஊடகங்களுக்கு இனிப்பான செய்தியாக இருந்தது. இவ்வாறான நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஊடகங்கள் முன் இருவரும் இவ்வாறு கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என இருவருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments