எம் பி செய்யத்
முஹம்மத் – பதுளை.
“பதுளை மாவட்ட முஸ்லிம்கள் சுமார்
நாற்பதாயிரம் வாக்குகளை வைத்துக் கொண்டு ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் பல்வேறு
கட்சிகளாக பிரிந்து வாக்களிப்பதால்
தமக்கனதொரு பிரதிநிதியை உருவாக்க முடியாமல் தொடர்ந்தும் சவால்களுக்கு உட்பட்டு வருகின்றனர்.
பாராளுமன்றத்தில் ஒரு முஸ்லிம் பிரதிநிதியை பெற முடியாத வாக்கு பின்னணியில் மாகாண
சபையில் ஒரு பிரதிநிதியை பெறுவதற்கான போதிய சூழல் தாராளமாக உள்ளது. ஆனால்
தொடர்ந்தும் தமக்குள் பல்வேறு கட்சிகளாகவும் குழுக்களாகவும் பிரிந்து
வாக்களிப்பதால் இன்றைய துர்பாக்கிய நிலைக்கு ஊவா முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இது தேர்தல் காலமாக உள்ளது வழமை போல் இம்முறையும் தமது வாக்குகளை, வெற்றி பெற முடியாத கட்சிகளுக்கு வழங்கி
சிதறடித்து விடாமல் வெற்றி பெறக் கூடிய
ஆளும் கட்சி ஒருவருக்கு வழங்கி தமது சமூக தேவைகளை பெற்றுக் கொள்ள முன்
வரவேண்டும் . இதுவே புத்திசாலித்தனமானதும் சமூக பாதுகாப்பை உறுதி செய்யக்
கூடியதுமாகும். கடந்த காலங்களில் நீங்கள் வாக்களித்து பாராளுமன்றத்திட்கு அனுப்பிய
நல்லாட்சி அரசாங்கத்தில் முக்கிய உறுப்பினரான ஹரீன் பெர்ணான்டோ அவர்கள் நல்லாட்சி
அரசில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த எந்த வொரு அநீதியையும் தட்டிக் கேட்க
முன்வரவில்லை. உங்கள் தேவைகளுக்கு ஏதாவது தீர்வு பெற்றுத் தந்துள்ளாரா ?
இன்று முஸ்லிம்
தரப்பின் சமூக தலைமைகள் முன்வைக்கின்ற அத்தனை சமூகச் சவால்களுக்கும் ஒரே தீர்வு, தமக்கானதொரு அரசியல் பலத்தை உருவாக்குவதை தவிர வேறு
வழியில்லை. முஸ்லிம் சமூகத்திலிருந்து படித்த அறிவாற்றலுள்ள ஒரு அரசியல்
பிரதிநிதியை உருவாக்க வேண்டிய மிகக் கட்டாயமான தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த விடயத்தில் முஸ்லிம் சமயப் பெரியார்கள்
பள்ளிவாயில்கள் ஒன்றிணைந்து தீர்க்கமான முடிவின்பால் சமூகத்தை வழிநடத்த வேண்டியது
காலத்தின் தேவையாக உள்ளது. “ என்று
முன்னாள் ஊவா மாகாண தமிழ் கல்வியமைச்சரும் , 2020 பாராளுமன்ற தேர்தலில்
மொட்டு சின்னத்தில் பதுளை மாவட்ட வேட்பாளருமான செந்தில் தொண்டமான் அவர்கள்
தெரிவித்தார்கள்.
கடந்த செவ்வாய் கிழமை மாலை , மலையக முஸ்லிம் கவுன்சில் (UCMC) மூலமாக
ஏற்பாடு செய்யப் பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்
தொண்டமான் அவர்களின் அட்டாம்பிடிய இல்லத்தில் நடைபெற்ற , பதுளை முஸ்லிம் சமூக
சிவில் பிரதிநிதிகளுடனான விஷேட
சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் செந்தில் தொண்டமான் அவர்கள் மேற்படி
கருத்து தெரிவித்தார்கள். தொடர்ந்தும் உரை
நிகழ்த்திய அவர்...
ü முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவத்தை உருவாக்குதல் ..
“ மலையகத்தில்
தமிழ் பேசும் சமூகமான நாம் அரசியல் ரீதியாக கொள்கையளவில் ஒன்றிணைந்து பயணிப்பதால்
பல சாத்தியமான அனுகூலங்களை அடையலாம். குறிப்பாக பதுளையில் அரசியல் அநாதரவான
நிலையிலுள்ள முஸ்லிம் சமூகம் மாகாண சபையில் ஒரு அங்கத்துவத்தை பெற்றுத்தர என்னாலான
அத்தனை முயற்சிகளையும் செய்யத் தயாராக உள்ளேன் . தற்போது நடைபெறும் பாராளுமன்ற
தேர்தலின் பின் உடனடியாக மாகாண சபை தேர்தல் நடைபெற உள்ளது. நடைபெறும் இப்பாராளுமன்ற
தேர்தலில் எனது வெற்றியில் கணிசமானதொரு பங்களிப்பை முஸ்லிம் சமூகம் செய்து ,
எனக்கான பேரம் பேசும் சக்தியை உறுதிசெய்யும் என்றால் அடுத்து வரும் மாகாண
சபைதேர்தலில் மொட்டு சின்னத்தில் முஸ்லிம் சமூகத்திற்கான பிரதிநிதியை பெற்றுத்தர
நான் உடந்தையாக இருப்பேன். அவ்வாறு மாகாண சபையில் ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவம்
உருவாகும் பட்சத்தில் நிச்சயமாக முஸ்லிம்களுக்கான தனியானதொரு மாகாண அமைச்சை பெற்றுக்
கொள்ளவும் வழி செய்வேன். இதற்காக
திறமையுடன் செயற்படக் கூடிய ,கல்வி கற்ற, சிறந்ததொரு ஆளுமையுள்ள பிரதிநிதியை நீங்கள் தான்
பெற்றுத்தரவேண்டும்.
அத்துடன் தொடர்ந்து வரும் ஐந்தாண்டுகள் திட்டமிட்டதொரு பொறிமுறையின்
கீழ் நாம் ஒன்றிணைந்து செயல் படுவதால் அடுத்துவரும்
2025ல் நடக்கக் கூடிய பாராளுமன்றத் தேர்தலில் பதுளை
மாவட்டத்திலிருந்து ஒரு முஸ்லிம் வேட்பாளரை முன்னிறுத்தி பதுளை மாவட்ட முஸ்லிம்களின்
விருப்பு வாக்குகளுடன் மலையக தமிழ் சமூகத்தின் விருப்பு வாக்குகளையும் பெறச்
செய்து பதுளை மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றில் முதலாவது பாராளுமன்ற உறுப்பினரை
பெற்றுத்தரவும் வழி செய்வேன்”. என்று கூறினார்.
( முஸ்லிம்கள் ஒரு விருப்பு வாக்கை முஸ்லிம்
பிரதிநிதிக்கும் ஏனைய இரண்டு விருப்புவாக்குகளை இரு தமிழ் வேட்பாளர்களுக்கும் ,
மலையக தமிழ் சமூகம் இரண்டு விருப்புவாக்குகளை இரு தமிழ் வேட்பாளர்களுக்கும் ஒரு
விருப்புவாக்கை முஸ்லிம் வேட்பாளருக்கும் வழங்குவதால் இதை சாத்தியப் படுத்தலாம்.)
ü அமைச்சில் முஸ்லிம் பிரிவு ........
“ தேர்தலுக்குப்
பின்பு எனக்காக ஒரு அமைச்சுபதவி வழங்கப் பட உடன்பாடு காணப் பட்டுள்ளது. குறிப்பாக
அது கல்வியமைச்சின் ராஜாங்க அமைச்சாகவோ அல்லது பிரதியமைச்சாகவோ இருக்க வாய்ப்பு
உள்ளது. எனது தனிப்பட்ட வேண்டுதலும் கல்வி சார்ந்த அமைச்சாகவே இருக்கின்றது.
அவ்வாறு அமையப் பெறும் அமைச்சில் தனியானதொரு முஸ்லிம் பிரிவை ஏற்படுத்தி இங்கே
நீங்கள் முன்வைத்த கல்விசார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்” . என்றும்
தெரிவித்தார்.
ü தேர்தல் விஞ்ஞாபனத்தில் பதுளை
முஸ்லிம்களின் அபிலாஷைகள் உட்படுத்தப் படல்
.....
“ எமது இ தொ கா
வுக்கும் ஸ்ரீ ல பொ ஜன பெரமுனவுக்கும் நடந்துள்ள உடன்படிக்கைக்கு அமைவாக நான்
இம்முறை மொட்டு சின்னத்தின் கீழ் பதுளை மாவட்ட வேட்பாளராக போட்டியிடுகின்றேன், ஆகவே
நீங்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க எனக்கு இன்னுமொரு எழுத்து மூல உப உடன்படிக்கைக்கு
எந்தத் தரப்புடனும் என்னால் வரமுடியாத நிலையே உள்ளது. ஆனால் நீங்கள் முன்வைத்த
கோரிக்கைகளில் சட்டத்திற்குட்பட்ட விடயங்களுக்கான தீர்வை எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டு உங்கள் கோரிக்கைகளுக்கான உத்தரவாதத்தினை என்னால்
தர முடியும். அதில் குறிப்பாக பதுளை மாவட்ட
இரண்டு முஸ்லிம் பாடசாலைகளை அனைத்து வித வசதிகளை கொண்ட பாடசாலைகளாக
முன்னேற்ற முடியும். மொனராகலை மாவட்ட பாடசாலைகளை திரு சஷீன்ந்திர ராஜபக்ஷ அவர்கள்
கவனித்துக் கொள்வதாக வாக்களித்துள்ளார். எனக்கு மொத்தமாக நான்கு பாடசாலைகள்
அவ்வாறு முன்னேற்ற உடன்பாடு காணப்பட்டு உத்தரவாதமளிக்கப் பட்டுள்ளது. அதில் இரண்டு
முஸ்லிம் பாடசாலைகளை பதுளை மாவட்டத்திற்காக பெற்றுத் தரமுடியும்.” என்றும்
கூறினார்.
ü முஸ்லிம் சமூகத்தின் மீது
எனக்குண்டான தார்மீக கடமை....?
“ முஸ்லிம் சமூகத்தின் மீது எனக்கொரு
தார்மீக கடமையுள்ளது.. . கடந்த 1983 கலவரத்தின் போது நாங்கள் கொழும்பில் சிவப்பு
பள்ளி ( சம்மன் கொடுவ ) பள்ளிக்கருகில் தான் தங்கியிருந்தோம் . அப்போதைய எமது இருப்பிடங்கள் வியாபார ஸ்தளங்கள் எல்லாம் தாக்கியழிக்கப் பட்டன. அப்போது அந்த
பள்ளியில் இருந்த முஸ்லிம் அண்டியும் அங்களும் தான் எமது உயிரை காப்பாற்றினர். அந்த காலத்தில் என்னுடைய பாட்டன் அமரர்
சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் ஒரு கபினட் அமைச்சராக இருந்தார். அப்போதைய
அவருடைய அமைச்சில் இரண்டு வாகங்கள் மட்டுமே இருந்தன. அடுத்த இரண்டு நாட்களுக்கு
பிறகே அந்த வாகனங்களில் வந்து எங்களை நுவரெலியாவுக்கு மீட்டு வந்தனர். ஆகவே அன்று அந்த பள்ளியில்
இருந்தவர்கள் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்காவிடின் எங்கள் நிலைமைகள் எவ்வாறு
இருந்திருக்குமோ என்று எங்களால் கூற முடியாது. இந்த வாழ்வியல் அனுபவங்களை
உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு எந்த மன குறைவும் இல்லை. “ என்றும் கூறினார்.
சுமார் இரண்டரை மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற
இந் நிகழ்வில் ஊவா மாகாண முஸ்லிம்களின் பல்வேறு பட்ட பிரச்சினைகள் சவால்கள் பற்றி
மிக ஆழமாக கருத்தாடப் பட்டது. குறிப்பாக கடந்த காலங்களில் ஏற்பட்ட ஆசிரிய
நியமங்களின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் , பர்தா பிரச்சினை , முஸ்லிம் பிரதி
நிதித்துவம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில்
மலையக முஸ்லிம் கவுன்சிலின் முன்னெடுப்புகள் குறிப்பாக மொட்டுக் கட்சி தேசிய
அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் மேற்கொள்ளப்
பட்ட உடன்படிக்கைகள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப் பட்டன . குறிப்பாக பதுளை
மாவட்ட முஸ்லிம்கள் தரப்பில் பொதுவானதொரு அமைப்பை ஏற்படுத்தி அவ்வமைப்புடன் எழுத்துமூல புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்துவதின்
சாத்தியப் பாடுகள் பற்றி ஆராயப்பட்டது. இதன் போதே தமக்கு அவ்வாறான தொரு
ஒப்பந்தத்திற்கு வர முடியாத மேற்படி நிலைப்பாட்டை கூறி தமது தேர்தல்
விஞ்ஞாபனத்தில் குறித்த விடயங்களை உள்ளடக்குவதாக தெரிவித்தார். இது கூட பாரியதொரு
சாதகமான நிலை என்பதை முஸ்லிம்கள் தரப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத்துடன்
முஸ்லிம் ஆசிரியர்களின் மற்றும் மாணவிகளின் பர்தா சம்பந்தமான தனது
நிலைப்பாட்டையும் திரு செந்தில் தொண்டமான் அவர்கள் விளக்கப் படுத்தினார்கள் . “
முஸ்லிம் பெண்களின் மாணவிகளின் பர்தாவை
எவராலும் மறுக்க முடியாது. அது முஸ்லிம்களின் கலாச்சாரம். அதேபோல் முஸ்லிம்
பாடசாலைகளில் கல்வி கற்கும் தமிழ் மாணவிகளுக்கும் பர்தா அணிந்துவர எவரும்
வற்புறுத்தக் கூடாது “ என்ற தமது நிலைப்பாட்டையும் விளக்கினார். இது ஏற்றுக்கொள்ள
படவேண்டிய விடயம் என்று ஏற்றுக்கொள்ளப் பட்டது. மக்ரிப் தொழுகைக்கான நேரத்தில் தமது
வரவேற்பறையில் ஜமாஅத் தொழுகை நடத்த
தேவையான ஏற்பாட்டை செய்து தந்தது குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருந்தது.
பதுளை மாவட்ட முஸ்லிம்கள் அரசியல்
வரலாற்றில் திருப்பு முனையாக அமையக் கூடிய இந் நிகழ்வில் பதுளை ஜம்மியத்துல் உலமா பொருளாளர் அஷ்ஷைஹு
ரூபில் (இஹ்ஷாணி) , செயலாளர் அஷ்ஷைஹு பௌசுள் நிசார் (சஹ்வி) உட்பட உயர்மட்ட உறுப்பினர்கள் , பதுளை வை எம் எம் ஏ தலைவர் எஸ் எம் நாசிம்
ஆசிரியர் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் , வை எம் எம் ஏ பதுளை மாவட்ட பணிப்பாளர்
எம் டி எம் பாரிக் , உமேடா செயலாளர் ஏ எம் நவாஸ் ஆசிரியர் , பதுளை ஒக்ஸ்போர்ட்
சர்வதேச பாடசாலையின் நிறைவேற்று பணிப்பாளர் அஷ்ஷைஹு ரிஸான் செயின் (நலீமி )
அவர்கள் பதுளை அல் ஜன்னத் சமூக சேவை அமைப்பின் தலைவர் எம் பௌமி அவர்கள் , பதுளை
பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பா அ
ச செயலாளர் அஷ்ஷைஹு இக்பால் (ஹாஷிமி
) அவர்கள் உட்பட யு சி எம் சி தலைவர் செயலாளர்
உறுப்பினர்கள் , உட்பட சமூக ஆர்வலர்கள் பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 Comments