அமெரிக்காவின் உலகளாவிய அதிகாரம் இரண்டு வலுவான தூண்களின் மீது நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஒன்று, அதன் அசுரத்தனமான இராணுவ பலம்; மற்றொன்று, உலக சந்தையை ஆட்டிப்படைக்கும் அதன் நாணயமான டொலரின் ஆதிக்கம்.
இவ்விரண்டும் சங்கமிக்கும் புள்ளியில்தான், 'அமெரிக்க வல்லாதிக்கம்' எனும் மானுடப்பண்பற்ற இரத்த வாடை வீசும் எதேச்சதிகார இரும்புக்கோட்டை கட்டி எழுப்பப்படுகிறது.
தன்னுடைய அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்காக, டொலர் எனும் ஒற்றை நாணயத்தைக் கொண்டு உலக நாடுகளின் கழுத்தை அமெரிக்கா நெரித்துக்கொண்டிருக்கிறது.
இந்த மாயவலையிலிருந்து விடுபட நினைக்கும் நாடுகள் சந்திக்கும் விளைவுகள், உலக வரலாற்றின் கொடுமை மிகுந்த ரத்தப்பக்கங்களாகப் பதிவாகியுள்ளன.
டொலர் என்ற பொருளாதார அடிமைத்தனத்திலிருந்து வெளியேறத் துணிந்த நாடுகளின் கதி என்ன என்பதை வரலாறு ஒருபோதும் மறக்காது.
உலக நாடுகளைச் சுற்றி வளைத்திருக்கும் இந்தச் சுரண்டல் அமைப்பிலிருந்து விடுபட முயல்வது ஒரு தேசத்தின் இயல்பான வேட்கைதான். ஆனால், அதற்கான அந்த நாடுகள் கொடுக்க வேண்டிய விலையோ மிகக் கொடியது.
இதற்கு வரலாறு சாட்சி சொல்கிறது: டொலரின் பிடியிலிருந்து விலக நினைத்தவர்களின் தலைகள் உருட்டப்பட்டன. நாடுகளின் இறையாண்மை இராணுவத்தின் இரும்பு கால்களால் மிதித்துத் துவம்சம் செய்யப்பட்டது.
ஈராக் நாட்டின் ஜனாதிபதி சதாம் ஹுசைன் கறுப்புத் தங்கமான பெட்ரோலை, டொலருக்கு விற்காமல் யூரோ நாணயத்திற்கு மட்டுமே விற்பனை செய்வேன் என முழங்கியவர்.
விளைவு?
அமெரிக்க ஊடகங்களால் அதிபயங்கர ஆயுதங்கள் இருப்பதாக பொய்கள் பரப்பப்பட்டு, அந்நாட்டின் மீது மிலேச்சத்தனமான போர் திணிக்கப்பட்டது. ஈராக் நாடு சிதைக்கப்பட்டது. இறுதியில் சதாம் ஹுஸைனுக்கு தூக்குக்கயிற்றை முத்தமிட நேர்ந்தது.
லிபிய நாட்டின் ஜனாதிபதி முஅம்மர் அல் கத்தாஃபி டொலருக்கு மாற்றாக ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவிற்கும் பொதுவான ஒரு நாணயத்தை உருவாக்கக் கனவு கண்டவர். அதன் பலனாக, அவர் மிகக் கொடூரமான முறையில் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டு, அமெரிக்க 'கைக்கூலி'களின் தூண்டுதலினால் படுகொலை செய்யப்பட்டார்.
இன்று ஈராக்கும் லிபியாவும் அரசியல் மற்றும் பொருளாதாரச் சிதைவுக்குள் தள்ளப்பட்டுள்ளன. இவர்களின் மரணத்திற்குப் பின் அந்த நாடுகள் சுடுகாடுகளாக்கப்பட்டன. அங்குள்ள எண்ணெய் கிணறுகளைச் சூறையாட அமெரிக்கக் கழுகுகள் இன்றும் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த வரிசையில், அண்மைய உதாரணம் தான் வெனிசூலா.
சீன நாணயமான ‘யுவான்’ (Yuan) மூலம் எண்ணெய் விற்பனை செய்யத் துணிந்த ஜனாதிபதி மதுரோவின் மீதும் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. டொலரை நிராகரித்தால், ஒரு தேசத்தின் தலைவருக்கு என்ன நேரும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று.
"டொலரை நீ நிராகரித்தால், அழிவைச் சந்திக்கத் நீ தயாராக இரு!" என்ற ஒரு கொடுமையான செய்தியை மீண்டும் மீண்டும் அமெரிக்கா உலகிற்குச் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் இந்த அடாவடித்தனமும், அராஜகமும் எத்தனைக் காலம் நீடிக்கப் போகிறது?
காலம் மாறிக் கொண்டிருக்கிறது. இன்றைய உலகம் ஒரு மாபெரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
டொலர் என்ற காகிதத்தை வைத்து உலகை ஆட்டிப்படைக்கும் இந்த அநீதிக்கு எதிராக ஒரு மாபெரும் உலகப் புரட்சி வெடிக்க வேண்டும்.
இந்தப் போராட்டம் வெறும் "டொலர்" எனும் நாணயத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி உலகெங்கும் நிகழ்த்தப்படும் அநியாயத்திற்கும், அநீதிக்கும், மேலாதிக்கத்திற்கும் எதிரான அறப்போராட்டமாக அமைய வேண்டும்.
08.01.2026
6.15pm

0 Comments