Ticker

6/recent/ticker-posts

வீட்டை கொள்ளையடித்த பொலிஸ் “கள்ளன்”!


பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் என்ற போர்வையில் கடந்த 9 ஆம் திகதி இரவு மீதொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து  கொள்ளையடித்ததாக கூறப்படும் பாராளுமன்ற பொலிஸ் பிரிவின் கான்ஸ்டபிள் உட்பட மூவரை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கான்ஸ்டபிள் உட்பட சந்தேகநபர்கள் மூவரும் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகவும், அதற்காக பணம் தேடும் நோக்கில் பொலிஸ் சீருடையில் முச்சக்கரவண்டியில் சென்று இந்தக் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் கடந்த 9ஆம் திகதி இரவு தனது கடமையை முடித்துக் கொண்டு தனது இரண்டு சகாக்களுடன்  மீதொட்டமுல்ல சந்தியில் உள்ள புகையிரத வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு சென்று வீட்டை சோதனையிடும் போா்வையில்  அந்த வீட்டில் இருந்தவர் அணிந்திருந்த இரண்டு மோதிரங்கள் உட்பட சுமார் 35,000 பெறுமதியான பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவர்கள் தொடர்பில் பிரதேசவாசிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (119) அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குடியிருப்பாளர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்களும் குறித்த வீட்டுக்குச் சென்றதால், கொள்ளையா்கள் தப்ப முடியாமல் தடுமாறியுள்ளனா்.

கிடைத்த தகவலின் பிரகாரம் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாி சம்பவ இடத்திற்குச் சென்று சுற்றிவளைத்து,  மக்களின் உதவியுடன் சந்தேகநபர்கள் மூவரையும் கைதுசெய்துள்ளார். 

பொலிஸ் சீருடை அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கான்ஸ்டபிள், 13 வருட பொலிஸ் சேவையை பூர்த்தி செய்துள்ளதாகவும் அவர் பாராளுமன்ற பொலிஸ் பிரிவில் சுமார் 3 வருடங்களாக கடமையாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சந்தேகத்திற்குரிய மற்ற இருவரும் இவரின் சகாக்கள் என்றும், மூவரும் ஐஸ் போதைப்பொருளுக்கு அதிக அடிமையானவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் மாலபே மற்றும் பத்தரமுல்ல பிரதேசங்களில் வசிக்கும் 30-40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான திஸாநாயக்க  என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் (82151)   நேற்று முதல் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்திய பொலிஸ் சீருடை மற்றும் கைவிலங்கு என்பன சாட்சியமாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளன. வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்திக்க நிலந்த தலைமையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Post a Comment

0 Comments