ஜனவரி 28, 2026:
இந்தியா, மகாராஷ்டிர மாநில அரசியலின் மிக முக்கியத் தூண்களில் ஒருவரும், மாநில துணை முதல்வருமான அஜித் பவார் (66), இன்று காலை புனே மாவட்டம் பாராமதி அருகே நிகழ்ந்த கோர விமான விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் அவருடன் பயணம் செய்த பாதுகாவலர், உதவியாளர் மற்றும் இரண்டு விமானிகள் என மொத்தம் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்து நடந்தது எப்படி?
இன்று காலை சுமார் 8:10 மணியளவில் மும்பை விமான நிலையத்திலிருந்து அஜித் பவார் தனது சொந்தத் தொகுதியான பாராமதிக்குத் தனியார் சார்ட்டர் விமானம் (Learjet 45) மூலம் புறப்பட்டார். பாராமதியில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் பங்கேற்பதற்காக அவர் சென்றுகொண்டிருந்தார்.
காலை 8:30 மணியளவில் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக விமானம் தனது முதல் முயற்சியில் தோல்வியடைந்தது. இரண்டாவது முறையாக தரையிறங்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுதளத்திற்கு அருகே உள்ள திறந்தவெளி மைதானத்தில் விழுந்து நொறுங்கியது. மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரியத் தொடங்கியதோடு, அடுத்தடுத்து குண்டுகள் வெடிப்பதைப் போல பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசியல் ஆளுமை:
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவராகவும், அம்மாநிலத்தின் செல்வாக்கு மிக்க தலைவராகவும் விளங்கிய அஜித் பவார், மகாராஷ்டிராவின் பொருளாதார மற்றும் அரசியல் நகர்வுகளில் முக்கியப் பங்காற்றியவர். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த அவர், அம்மாநிலத்தின் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments