முற்றுகையிடப்பட்ட காசா முனையில் நூற்றுக்கணக்கான கல்லறைகளை இஸ்ரேலியப் படைகள் தோண்டி எடுத்து சிதைத்துள்ளதற்கு ஹமாஸ் இயக்கம் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இது ஒரு "புதிய போர்க்குற்றம்" என்று அந்த அமைப்பு சாடியுள்ளது.
கல்லறைகள் சேதம்
காசா நகரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மயானத்தில், இஸ்ரேலிய ராணுவம் பெரிய அளவிலான அகழ்வுகளை மேற்கொண்டது. காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருந்த கடைசி கைதியின் உடலைத் தேடுவதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் பல நூற்றாண்டுகளாக இருந்த கல்லறைகள் சிதைக்கப்பட்டன.
இது குறித்து ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஹஸெம் காசிம்Hazem Qassem கூறுகையில், "இஸ்ரேலிய ஆட்சியின் இந்த தார்மீகமற்ற செயல், சர்வதேச சமூகம் மௌனம் காப்பதாலேயே நடக்கிறது. நவீன காலத்தில் இதுவரை நடந்திராத இத்தகைய குற்றங்களுக்கு இஸ்ரேலைப் பொறுப்பேற்கச் செய்ய உலகம் தவறிவிட்டது" என்று குற்றம் சாட்டினார்.
கைதி ரான் க்விலி உடல் மீட்பு
காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருந்த கடைசி கைதியான ரான் க்விலி (Ran Gvili) என்பவரின் உடல் மீட்கப்பட்டு இஸ்ரேலுக்கு கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் திங்கள்கிழமை அறிவித்தது. 2023, அக்டோபர் 7 அன்று நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இவரைத் தேடியே இந்த மயானத் தேடுதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
ஒப்பந்தத்தை மீறும் இஸ்ரேல்
போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை ஹமாஸ் முழு பொறுப்புடன் நிறைவேற்றிவிட்டதாக ஹஸெம் காசிம் தெரிவித்தார். உடலைக் கண்டறிய தாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிய நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மற்ற நிபந்தனைகளைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு இப்போது இஸ்ரேலிடம் உள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
மனித உரிமை அமைப்புகள் கவலை
இதற்கிடையில், யூரோ-மெட் (Euro-Med) மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. கைதிகளைத் தேடுவது என்ற காரணத்தைக் காட்டி, கல்லறைகளின் புனிதத்தைச் சிதைப்பதற்கோ அல்லது இறந்தவர்களின் உடல்களை அவமதிப்பதற்கோ உலகில் எந்த சட்டமும் அங்கீகாரம் வழங்காது என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தொடரும் தாக்குதல்கள்:
போர்நிறுத்த முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும், இஸ்ரேல் இன்றும் காசா நகரின் கிழக்கே வான்வழித் தாக்குதல் நடத்தி குறைந்தது நான்கு பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளதாக காசிம் தெரிவித்தார். இது இஸ்ரேல் தனது இனப்படுகொலைப் போரைத் தொடர விரும்புவதையே காட்டுகிறது என்றும் அவர் சாடினார்.
மேலும், பாலஸ்தீனர்களின் நூற்றுக்கணக்கான உடல்களை இஸ்ரேல் இன்னும் திருப்பித் தராமல் வைத்திருப்பது ஒரு "மிருகத்தனமான குற்றம்" என்றும், இது சர்வதேச சட்டங்களை வெளிப்படையாக மீறும் செயல் என்றும் ஹமாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments