"வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்ற பழமொழிக்கு ஏற்ப, இஸ்ரேலிய இராணுவத்தினர் மத்தியில் அதீத மனச் சிதைவு, மன நோய்கள் மற்றும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.
அண்மையில் 'ரொய்டர்' நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியின் படி, காஸாவில் 71,000 உயிர்களைக் காவு கொண்ட இஸ்ரேலின் இரத்த வெறி ஆட்டம், இன்று அந்த இராணுவத்தினரின் மனங்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளதை அறியக் கூடியதாக இருக்கிறது.
போர்க்களத்தில் இருந்து வீடு திரும்பிய இராணுவத்தினர், Post-Traumatic Stress Disorder - PTSD என்ற அதிர்ச்சி மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டு இன்று நடைப்பிணங்களாக மாறியுள்ளனர்.
சத்தத்தைக் கேட்டால் பதறுவது, உறக்கத்தில் அலறுவது, குடும்பத்தினருடன் அந்நியப்படுவது என அவர்களின் இயல்பு வாழ்க்கை சிதைந்து போயுள்ளது.
புள்ளிவிவரங்களின்படி, அக்டோபர் 2023 முதல் ஜனவரி 2026 வரையிலான காலப்பகுதியில் காயமடைந்த 22,300 இஸ்ரேலிய வீரர்களில், 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் (சுமார் 13,000 பேர்) மனநலப் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
2023-ம் ஆண்டை விட இந்த மனச் சிதைவு நோய் 40% அதிகரித்துள்ளது; இது 2028-க்குள் 180% வரை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. தற்போது 82,000-க்கும் அதிகமான இராணுவத்தினருக்குப் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் 31,000 பேர் தீவிர மன நோய்க்கு ஆளாகியுள்ளனர்.
காஸாவில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்கு அமெரிக்க ஆயுதங்களை ஏந்தி வீரம் காட்டியவர்கள், இன்று தங்களுக்குள் ஏற்பட்ட 'அறநெறிச் சிதைவு' (Moral Injury) மற்றும் குற்ற உணர்வால் நிலைகுலைந்துள்ளனர்.
இருட்டைக் கண்டு அஞ்சும் இவர்கள், தனிமையில் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் (Knesset) தகவல்படி, 2024-ல் 21 வீரர்களும், 2025-ன் பாதியிலேயே 17 பேரும் தற்கொலை செய்துள்ளனர். மேலும் 279-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மனதளவில் சிதைந்துபோன இந்த வீரர்களுக்கு மருந்து மாத்திரைகள் பலன் தராத நிலையில், இஸ்ரேலிய அரசு தற்போது 'அலைச்சறுக்கு' (Surfing) போன்ற இயற்கை சார்ந்த விளையாட்டுகள் மூலம் சிகிச்சைகளை முன்னெடுத்துள்ளது.
“செர்பிங் தெரபி”(Surfing therapy) மூலம் கடல் அலைகளின் மீது சமநிலை காக்க முயற்சிப்பது, போரின் கொடூர நினைவுகளைத் தற்காலிகமாக மறக்கடிக்க உதவும் என்று இஸ்ரேலிய உளவியலாளர்கள் கருதுகின்றனர். இஸ்ரேலிய இராணுவத்தினர் உல்லாச பிரயாணிகளாக பல நாடுகளுக்கும் சென்று இந்த அலைச் சறுக்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், அலைகளின் மேல் அவர்கள் தேடும் சமநிலை, அவர்கள் கைகளில் படிந்த இரத்தக் கறையை ஒருபோதும் அகற்றாது.
மனிதநேயமில்லாமல் ஆயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொன்று குவித்த இரத்தக் காட்டேரிகளின் மனநோயைக் குணப்படுத்த மருந்துகள் ஏதும் உண்டா?
சொல்லுங்கள்..!
அஸீஸ் நிஸாருத்தீன்
17.01.2026
07.00pm

0 Comments