Ticker

6/recent/ticker-posts

இந்தியா- 2 மாநில சட்டசபை தேர்தல் முடிவு அறிவிப்பு


புதுடெல்லி,ஜார்கண்ட், காஷ்மீர் மாநில சட்டசபைகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது.

ஜார்கண்ட் மாநிலத்தில், நக்சலைட்டுகள் தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாக்காளர்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து ஓட்டுப்பதிவு செய்தனர். இதனால் அந்த மாநிலத்தில், 66 சதவீத வாக்குகள் பதிவாகின. அந்த மாநிலத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் இதுதான் அதிகபட்ச வாக்குப்பதிவு.
காஷ்மீரிலும், மக்கள் பெருந்திரளாக கூடி வந்து, தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இதனால் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு 65 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்தது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி செய்து வந்த ஜார்கண்டில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படியே, பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்களும், அதன் கூட்டணி கட்சியான அனைத்து இந்திய ஜார்கண்ட் மாணவர்கள் யூனியன் வேட்பாளர்களும் முன்னிலை பெறத் தொடங்கினர்.
இறுதியில் 81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் பாரதீய ஜனதா கட்சி 37 இடங்களையும், அதன் கூட்டணி கட்சியான அனைத்து இந்திய ஜார்கண்ட் மாணவர்கள் யூனியன் 5 இடங்களையும் கைப்பற்றின. எனவே 42 இடங்களுடன் இந்த கூட்டணி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது.

இங்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 19, ஜார்கண்ட் விகாஷ் மோர்ச்சா (பி) கட்சிக்கு 8 இடங்கள், மற்றவர்களுக்கு 6 இடங்கள் கிடைத்துள்ளன. 6 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி 4–வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த மாநிலத்தில் 2009–ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு 25, பாரதீய ஜனதா மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு தலா 18 இடங்கள், மற்றவர்களுக்கு 20 இடங்கள் கிடைத்தன. எனவே இங்கு பாரதீய ஜனதாவின் பலம் கூடி உள்ளது. காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் எதிர்பார்த்தபடியே தொங்கு சட்டசபை அமைகிறது. இங்கு எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஜார்கண்டில் ஆட்சியைப் பிடித்த பாரதீய ஜனதா கட்சி, இங்கு 25 தொகுதிகளில் வெற்றி பெற்று, 2–வது பெரிய கட்சியாக வந்துள்ளது.
இங்கு முப்தி முகமது சயீத்தின் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது. தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி 12 இடங்களுடன் 4–வது இடத்தில் உள்ளது.

முந்தைய 2008 தேர்தலில் காஷ்மீரில், தேசிய மாநாட்டு கட்சிக்கு 28, மக்கள் ஜனநாயக கட்சிக்கு 21, காங்கிரசுக்கு 17, பாரதீய ஜனதாவுக்கு 11, மற்றவர்களுக்கு 10 இடங்கள் கிடைத்தன. இந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரசும் பெருத்த பின்னடைவை சந்தித்துள்ளன. பாரதீய ஜனதாவும், மக்கள் ஜனநாயக கட்சியும் பலத்தை பெருக்கி கொண்டுள்ளன.

இங்கு 2–வது பெரிய கட்சியாக வந்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா, ‘‘காஷ்மீரில் ஆட்சி அமைக்க அனைத்து வழிகளும் திறந்தே இருக்கின்றன. பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கவோ அல்லது ஆட்சியில் அங்கம் வகிக்கவோ அல்லது அமையக்கூடிய ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தரவோ வாய்ப்புகள் உள்ளன’’ என்றார்.

தனிப்பெரும் கட்சியாக வந்துள்ள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி, ‘‘ஆட்சி அமைப்பது தொடர்பாக அவசரப்பட்டு முடிவு எடுக்க மாட்டோம். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், நல்லாட்சி அமைப்பதற்கும் உரிய வாய்ப்புகள் குறித்து ஆராய அவகாசம் தேவைப்படுகிறது. காஷ்மீர் மக்களின் நலனையொட்டி முடிவு எடுப்போம்.

கடந்த 2002–2008 காலகட்டத்தில் காங்கிரசுடன் பொதுவான செயல்திட்டத்துடன் ஆட்சி நடத்தி இருக்கிறோம். அது நன்றாக அமைந்திருந்தது. அமையக்கூடிய அரசு, நம்பகத்தன்மையை கொண்டதாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படுவதாகவும் அமைய வேண்டும்’’ என கூறினார்.

மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் முசாப்பர் உசேன் பெக், ‘‘காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைப்பது எளிதானது. ஆனால் பாரதீய ஜனதா கட்சியும் தீண்டத்தகாதது அல்ல’’ என கருத்து தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மக்கள் ஜனநாயக கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் நேற்று கருத்து தெரிவிக்கையில், ‘‘நாங்கள் எப்போதும் திறந்த மனதுடன் இருக்கிறோம். கடந்த காலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சி என இரு கட்சிகளுடனும் கூட்டணி அமைத்திருக்கிறோம். ஒரு விஷயம் தெளிவானது, நாங்கள் பாரதீய ஜனதாவுடன் கூட்டு சேர முடியாது’’ என கூறினார்.

எனவே காஷ்மீரில் ஆட்சி அமைப்பது யார் என்பதில் தற்போது தெளிவற்ற நிலையே காணப்படுகிறது. அடுத்த சில நாட்களில் அங்கு ஆட்சி அமைக்கும் நடவடிக்கை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments