Ticker

6/recent/ticker-posts

முஸ்லிம் காங்கிரஸ் - காய் நகர்த்தலும் காலம் கடத்தலும்.

  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமூத்தின் 90 வீதமானோர் எந்த தடுமாற்றமுமின்றி சுயமாகவே முடிவெடுத்து விட்டார்கள் போல் தெரிகிறது. அதற்கு முஸ்லிம்களின் அண்மைக்கால வாழ்வியல் சூழ்நிலைகள் ஏதுவாக அமைந்துவிட்டன. .


இந்நிலையில் யார் எப்படியான விமர்சனங்களை முன்வைத்தாலும்  இந்தத் தேர்தலில், இந்நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்தை தேசிய அளவில் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற, மற்றும் முஸ்லிம் வாக்குகளை தம்வசம் அதிகமாய் கொண்டுள்ள  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு சம்பந்தமாக அரசியல் வட்டாரங்களும், ஊடகங்களும் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக  அக்கட்சியின் முடிவை எதிர்பார்த்து களைத்துக் காத்திருக்கின்றன.

தலைவர் ஹக்கீம் எந்த பக்கம் சாய்ந்தாலும் கடுமையான விமர்சனங்களுக்கும் தூஷித்தலுக்கும் ஆளாவார் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. 

முஸ்லிம்காங்கிரஸ் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்ரிபாலவை ஆதரிப்பதாக அறிவித்தால் என்ன நிகழும்?
“இவர்கள் இனவாதிகள் கரையோர மாவட்டம் கேட்டார்கள் நாம் கொடுக்க விரும்பவில்லை.

 நாட்டை பிரித்து புலிகளுக்கு வழங்கப் போகும் மைத்ரீயின் பொது அணி இந்தக் கோரிக்கைக்கும் இணங்கிவிட்டது. முஸ்லிம்களுக்கும் இந்நாட்டின் இன்னுமொரு துண்டை முஸ்லிம்களுக்குக் கொடுக்கப் போகிறார்கள்” என்பார்கள்.


இதனால் சிலவேளை மைத்ரீக்கு கிடைக்கவிருக்கும் சில சிங்கள வாக்குகளைக் கூட இந்தப் பிரச்சாரம் கெடுத்துவிடும்.


போதாக்குறைக்கு தற்காலிகமாக அதிகாரமுள்ளவர்களால் கட்டி வைக்கப்பட்டுள்ள, பொதுபல சேனா போன்ற வெறிநாய்களை அவிழ்த்து விட்டு, மு.கா மீதும் முஸ்லிம் சமூகத்தின் மீதும் ஏவிவிடப்படலாம்.


முஸ்லிம்காங்கிரஸின் முடிவுக்குப் பிறகு மேடைபோட்டு முழங்கி அக்கட்சியின் மீது  சேற்றை வாரியிறைக்க  காத்திருக்கும் ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லாஹ், பதியுத்தீன் அணிகளின் வழமையான விமர்சனங்;கள் காதைத் துளைக்கும் அளவிற்கு ஒலிக்கவும் கூடும்.


அப்படியானால் கட்சிக்குள் உள்ள சிலரின் கருத்துப்படி பேசாமல் மு.கா மஹிந்தவையே ஆதரித்தால் எப்படியிகருக்கும்...?
அதை இங்கு சொல்லவே தேவையில்லை இதற்காகவா இவ்வளவு காலமெடுத்தார்கள். 

தலைவருக்கும் மு.கா அமைச்சர்களுக்கும்  எத்தனையோ குஐடுநுகள்  இருக்கின்றன. அதற்குப் பயந்துதான் பெட்டிப் பாம்பாய் அடங்கிவிட்டார்கள் என்றும்,  முஸ்லிம்கள் மீது இனக் கலவரத்தை ஏவி விட்ட பொது பலசேனா ஆதரவு வழங்கும் அரசுக்கு வாக்காலத்து வாங்குகிறார்கள், பள்ளிவாசல்களை உடைத்தபோதும் அந்தப் புனிதத் தலங்களில் பன்றியின் இறைச்சியை வீசி எறிந்த போதும் கையாலாகாதவர்களாய் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், இன்று  முஸ்லிம் சமுகத்தின் நாடித்துடிப்பு தெரிந்திருந்தும், கோடிகளுக்காக விலை போய்விட்டார்கள் இந்தக் கேடிகள் என்றெல்லாம், அரசியல் தெரிந்த தெரியாத அனைவராலும் கிழி கிழியென கிழிக்கப் படுவார்கள்.


முகநூல் பக்கங்களிலும்  சமூக வலைத்தளங்களிலும் மு.கா தலைவரின் குடும்பத்தையே சந்திக்கு இழுத்து பந்தாடுவார்கள்.


இப்படி இன்னும் என்னென்னவோ நடக்கும் சொல்லிக் கொண்டே போகலாம்.
அப்போ முஸ்லிம் காங்கிரஸை என்ன தான் செய்யச் சொல்வது...?
இந்நாட்டின் பெரும் பான்மையான மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்கள்.

 அந்த எதிர்பார்ப்பின் அலை மெல்ல தலைதூக்குகிறது என்பதும் ஒரு கள நிலவரத் தகவல்.
பெரும்பான்மை சிங்கள மக்களை விட  அந்த மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் இன்னொரு சிறுபான்மையினமான தமிழ் சமூகத்தின் பெரும்பான்மை ஆதரவைக் கொண்ட பிரதிநிதிகளான  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் அவர்களுக்குள் தனியான ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்தாலும் சம்பிரதாய பூர்வமாக அநேகமாக நடுநிலை போக்கையே பகிரங்மாக அறிவிக்கப்போகிறர்கள் என்றே தெரியவருகிறது.


ஏன்? ஜேவீபியினர் கூட இந்த அரசாங்கம் மாற வேண்டும் என்கின்ற விடயத்தில் உள்ளுர பெரும் ஆர்வத்துடன் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு அரசியல் மாற்றத்திற்காக பெரும் பிரயத்தனமெடுக்கின்றார்கள்.

செயற்படுகின்றார்கள். ஆனால் அவர்களுடைய பகிரங்க நிலைப்பாட்டை இந்த நாடே அறியும். அவர்கள் யாருக்கும் வாக்கு சேகரிப்பதில்லை என்றும் மஹிந்தவை தோற்கடிப்பது அவசியம் என்றும் சொல்லி வருகின்றார்கள். 

ஆக, முஸ்லிம் சமூகத்தில் சந்தைப் படுத்த முடியாத மகிந்தவை ஆதரித்து, தேர்தலுக்கு முன் முஸ்லிம் சமுகத்திற்குள்ளும் தேர்தலுக்குப் பின் மகிந்தவிடமும் தன்னுடைய மதிப்பைக் குறைத்துக் கொள்ளாமல் இருப்திலும் அதே  போன்று  மைத்ரீயை ஆதரித்து அவர் தோற்றுப் போனால் அதற்குப பின்னர் ஏற்படும் நிலைமையை சமாளிக்க முடியாமல் கையைப் பிசையும் நிலை ஏற்படாமலும் இருக்க மு.கா. முயல்கிறதா?
மு.காவிற்கு இது ஒரு சவால்.

இந்த சவாலை சந்திக்கும் ஆளுமையும் சாணக்கியமும் ஹக்கீமுக்கு இருக்கின்றதா...? பொறுத்திருந்து பார்ப்போம்.

எம்.என். பாத்திமா அம்னா

Post a Comment

0 Comments