Ticker

6/recent/ticker-posts

கரையோர மாவட்டம்? மீண்டும் முருங்கை மரம் ஏறும் முஸ்லிம் காங்கிரஸ்

‘‘கூரையில் ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போனானாம்’’ என்ற ஒரு கூற்றை கேள்வி பட்டிருப்பீர்கள்.  இன்றைய முஸ்லிம் தலைமைகளுக்காகவே என்றோ சொல்லி வைத்த மிகப் பொருத்தமான கூற்றாய் தான் இதைப் பார்க்க முடிகிறது.
எப்படி என்று கேட்கின்றீர்களா?

தேர்தல் ஒன்று வருகிறதே..! நொந்து கெட்டு நொண்டியர்களாக இருந்த எமது அரசியல் தலைவர்கள். ஒன்று பட்டு சண்டியர்களாக மாறப்போகின்றார்கள்
முஸ்லிம் சமூகம் பயங்கர நெருக்குதல்களுக்கும், தாக்குதல்களுக்கும் முகம் கொடுத்த வேளைகளில் எதையும் செய்ய திராணியற்றவர்களாய்; திக்கி விக்கித் திரிந்தவர்கள், இனிமேல்;  உரிமைகளுக்கு குரல் எழுப்பும் உத்தமர்களாய் மாறப் போகின்றார்கள். உதிரம் சிந்தியாவது உரிமைகளைப் பெற்றுத் தருவதாக பிரசாரம் செய்யப் போகின்றார்கள்.

உரிமைகளை பேரம் பேசி, பேச்சுவார்த்தை நடாத்தி வெற்றிபெரும் ஜனாதிபதியின் சந்நிதியில் சரணாகதியடைய சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கும் இவர்கள் சரித்திரம் படைத்தவர்கள்.
‘‘சோனகன் தொப்பி திரும்பும் பக்கம் சென்றுவிடுவான்’’ என்ற சிங்கள கூற்றை, வரலாற்றில் அச்சொட்டாக நிரூபித்துக் காட்டியதில் சமகால எமது அரசியல் தலைவர்கள் சாதனை படைத்தவர்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது? மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் தனது வழமையான பாணியில் மதில்மேல் பூனையாக இருக்கிறார். இருந்தாலும் அலரி மாளிகை பக்கம் பாய்வதற்கான அறிகுறியே தென்படுவதாக அனைவரும் சொல்கின்றார்கள்.

90களுக்கு பின்னர் இலங்கை அரசியலில் ஆளும் கட்சியோடு கூட்டாகவே மு.காவின் ‘பங்கு’ இருந்து வந்திருக்கிறது. ஆனால் பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவிற்குப் பின்னர் முஸ்லிம் சமூகம் எதையும் உருப்படியாக பெறவில்லை என்பது வேதனையான விடயமாகும்.

அமைச்சர் ஹகீமின் வார்த்தைகளில் சொல்வதானால் வெல்லும் குதிரைக்குத் தான் பந்தயம் கட்ட வேண்டுமாம். பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவிற்குப் பின்னர், மு.கா தலைவர் ஹகீம் அவர்களின் ஆதரவில் கடந்த காலங்களில் ‘‘வென்ற குதிரை’’ களோடு சேர்ந்திருந்தும் சமூகத்திற்கு ஒன்றும் கிடைக்கவில்லை. சிலவேளை குதிரைகளின் உதவிகளை விட உதைகள் மட்டுமே தாராளமாகக் கிடைத்திருக்கின்றன. வென்ற குதிரைகள் மு.காவோடும், முஸ்லிம் சமூகத்தோடும் நன்றியோடுதான் நடந்துக்கொள்ளவும் இல்லை.

‘‘நன்றி கெட்ட இந்த ‘வென்ற குதிரை’களால் நமக்கு என்ன பயன்? நமக்கு எங்கே பாதுகாப்பு?’’என்ற சமூகத்தின் கேள்விகளை, அச்சுறுத்தல்களில் அடங்கி வாழும் அதன் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கு இனவாத அச்சுறுத்தல் கொண்ட ‘நிகழ்காலமே’ சிறந்த சான்றாக உள்ளது.
இப்பொழுது பெரும்பான்மை இனத்திடமிருந்தே மஹிந்தவின் ‘சர்வ’ அதிகார அரசிற்கு எதிராக குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
இந்த ‘சர்வாதிகார’ ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்ற கோஷம், மக்கள் கோஷமாக நாளுக்கு நாள் மாறி வருகிறது. அரசியல் தளத்தில் பேசு பொருளாகி வரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை, மு.கா பேசா பொருளாக்கி மௌனமாய் நிற்கிறது.

ஹெல உறுமய போன்ற கட்சிகள் 18வது அரசியல் சட்டத்திருத்தத்திற்கு தாம் ஆதரவளித்தது பெரும் குற்றம் என்று மக்களிடம் மன்னிப்பு கோரி நிற்கின்றன. ஆனால் இந்த ஜனநாயக விரோத சர்வாதிகார முறையை விமர்சிப்பதில் நின்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மெதுவாக நழுவியே நிற்கின்றன
இந்த ஜனநாயக விரோத 18வது அரசியல் திருத்தத்திற்கு முக்கிய பங்குதாரராக, பாராளுமன்றத்தில் ஆதரவளித்த  மு.கா. தலைமையோ இது ஏதோ இங்கிலாந்தில் நடக்கும் பிரச்சினை என்ற தோரணையில் சும்மா பார்த்துக் கொண்டிருந்து விட்டு, இந்த கரையோர மாவட்ட புரளியை கிளப்பியிருக்கிறது.

நான் இப்படிச் சொல்வதால் கரையோர மாவட்டக் கோரிக்கைக்கு எதிரான கருத்தாக இதனை யாரும் அர்த்தப்படுத்தி விடக் கூடாது.
சந்தர்ப்பவாத அரசியலால் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகள், அபிலாஷைகள் எவ்வாறு மலினப்படுத்தப்;படுகின்றது என்பதை குறிப்பிட்டுக்காட்டுவதுதான்; இந்தப் பதிவின் நோக்கம்.
2012 கிழக்குமாகாண சபைத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதற்கு மு.காவினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளில் இன்றுவரை நிறைவேற்;றப்படாத  இரண்டு கோரிக்கைகளில் இந்த கரையோர மாவட்டக் கோரிக்கையும் ஒன்றாகும். இரண்டாவது கோரிக்கை மு.கா விற்கான முதலமைச்சர் பதவியாகும்.

இந்த இரண்டு கோரிக்கைகளையும் தேர்தல் காலத்தில் ஏற்றுக்கொண்டு விட்டு வெற்றியின் பின்னர் மஹிந்த அரசு மறுத்திருக்கின்றது.  மறுக்கப்பட்ட இந்த இரண்டு உரிமைகளையும் கிழக்கு மாகாண மக்களுக்கு பெற்றுக் கொடுப்பது மு.காவின் தார்மீக கடமையாகும். அமானிதப் பொறுப்புமாகும். 
வேடிக்கை என்னவென்றால், மஹிந்த அரசு மு.காவின் இந்த இரண்டு கோரிக்கைகளையும் மறுத்து நிராகரித்த நிலையில் தொடர்ந்தும் கிழக்கு மாகாண சபையிலும், பாராளுமன்றத்திலும் ஆளும் கட்சியில் ஒட்டிக் கொண்டே மஹிந்த அரசிற்கு உறுதுணையாக இருந்து வருவதுதான்.
ஆனால் மீறப்பட்ட, கிழக்கு மாகாண மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பாக தலைவர் ஹக்கீமும் இதுவரை மூச்சு விடவுமில்லை. அதைப்பற்றி அலட்டிக் கொள்ளவும் இல்லை. மஹிந்த அரசில் ஒட்டி இருக்கின்ற இனவாத சக்திகளும் அன்று (2012 கிழக்கு மாகாண தேர்தல் காலத்தில்)  மு.கா முன்வைத்த இந்தக் கரையோர மாவட்டக் கோரிக்கையை இன்று போல் எரிகின்ற பிரச்சினையாக எடுத்துக் கொள்ளவும் இல்லை. 

யதார்த்த பூர்வமாக கரையோர மாவட்டத்தின் அவசியத்தை ஆராய நான் இங்கு முற்படவில்லை. கரையோர மாவட்டத்தின் தேவையை கொச்சைப்படுத்தவும் இங்கு முற்படவில்லை என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். ஆனால் கரையோர மாவட்டம் என்ற கரு, பிழைப்புவாத அரசியல் தளம் ஒன்றுக்கு இரையாகி வருகிறது. கிழக்கு மக்களின் வாக்குகளை கொள்ளையிட வீசப்படும் ‘கேரட்’ கிழங்காக மாறி வருகின்றது என்பதை மட்டும் அடித்துச் சொல்ல முடியும்.
சிங்கள இனவாதிகள் ‘கரையோர மாவட்டத்தை’ கரும்பாய் வைத்து சப்பிக் கொண்டிருக்கின்றார்கள். காலம் கடந்தாவது கரையோர மாவட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். ஹரீஸின் கருத்துக்கள் யதார்தமானவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால் நடப்பவை எல்லாம் ஒரு நாடகமாகத் தெரிவதை மறுக்கவும் முடியவில்லை. கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது செய்யப்பட்ட ஒப்பந்த்தின் போது ஏன் பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக கேள்விகள் எழுப்பப்படவில்லை? ஏன் தெளிவுகள் கொடுக்கப்படவில்லை?; ஹரீஸ் எம்.பி. கொடுத்தது போன்ற விளக்கத்தைக் அன்றே கொடுக்க முடியாமல் போனதற்கான காரணம் என்ன?

ஆனால் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் தருவாயில் திட்டமிட்டே கரையோர மாவட்டம் தொடர்பான சர்ச்சை ஒரு பூதாகர பிரச்சினையாய் முன்வைக்கப்பட்டிருக்கிறது போல்தான் தெரிகிறது. ஆளும் கட்சியின் பிரதம அமைச்சரே இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். 2012ல் மாகாண சபை தேர்தலின் போது பிரதம அமைச்சருக்கு தெரியாமலா மஹிந்த அரசோடு மு.கா உடன்பாடு செய்தது?

இந்த சர்ச்சையை பேசு பொருளாக்கி, இதை போராடி பெறக் கூடிய ஒன்றாய் அடையாளப்படுத்தி, மீண்டும் வாக்குறுதிகளை பெற்றுக்கொண்டு  மஹிந்தவிற்கு கிழக்கு மக்களின் வாக்குககளை கொள்ளையடித்துக் கொடுக்கும் சுயநலநோக்கம் கொண்ட ஒரு செயல்வடிவமா என்ற சந்தேகமும் இப்போது எழுகிறது.

கோரிக்கைகள் நிராகிக்கப்பட்டால் மு.காவின் எதிர்வினை எப்படியிருக்க வேண்டும்? ஏமாற்றிய ஒரு ஆட்சியில் அமைச்சர்களாக எப்படி இருக்க முடியும்? அவமானமாக இருக்காதா? ‘இதய சுத்தி’யுடன் (இக்லாஸ்) முன் வைக்கப்பட்டிருந்தால், அது நிராகரிக்கப் பட்டபோது புலியாய் சீறிப் பாய்ந்திருக்க வேண்டுமே? மாறாக மஹிந்தவின் அடுப்பங்கரை பூனையாக மாறமுடியாதல்லவா?

எதிர்வரும் தேர்தல் பிரசாரத்திற்கு எந்த ‘பருப்பும’; வேகாத நிலையில், கரையோர மாவட்டக் கோரிக்கையாவது மீண்டும் கைகொடுக்குமா? என்றுதான் மு.கா. கனவு கண்டது.

எது எப்படியிருப்பினும், முஸ்லிம் மக்களின் வெறுப்புக்கு ஆளாகி வரும் மஹிந்த அரசிற்கு, இனிமேலும் மு.கா ஆதரவளிப்பது இலேசான காரியமல்ல. மஹிந்த அரசுடனான தொடரும் உறவு தனது அரசியல் இருப்பை கேள்விக் குறியாக்கி வருவதையும், முஸ்லிம் சமூகத்திலிருந்து  மு.கா அந்நியப்பட்டு வருவதையும் தலைவர் ஹகீம் நன்கு உணர்ந்தே இருக்கிறார்.
மஹிந்தவின் ஆட்சியில் அங்கம் வகிக்கும் பலர் அவரின் அரசியல் கைதிகளாய் இருப்பதாக சொல்லப்படுகின்றது. அமைச்சர்களில் பலர் குற்றக் கோவைகளின் (Files); கைதிகளாகவும் இருப்பதாகவும் நம்பப்படுகின்றது.
எனவே சமூகத்தின் பாதுகாப்பை விட தனது பாதுகாப்பின் மீது கவனம் செலுத்தும் இந்த தலைமைகளின் கவலைக்கிடமான நிலையில் சிக்கி சமுதாயம் கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கிறது. சிலவேளைகளில் இவர்கள் ஆட்சியாளனின் அடிமைகளாக மாறும் சமூகம் அநாதரவான நிலைக்குத் தள்ளப்படுகின்றது.

காணாமல் போயிருந்த ‘‘கரையோர மாவட்டம்’’  மீண்டும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. மஹிந்தவிடம் உரிமைகளை மீண்டும் போராடி பெற்றதாகவும் அதற்கான வாக்குறுதிகள் கிடைத்ததாகவும் அரசியல் தலைமைகள் அடித்துச் சொல்லுவார்கள்.
ஆனால், மக்கள் முட்டாள்களல்ல என்று மட்டும் நாம் அவர்களுக்கு அடித்துச் சொல்லுவோம்.


Post a Comment

0 Comments