Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவின் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றாலே 2500 ரூபாய்!

மகிந்த ராஜபக்ஷவின் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்கும் சமுர்த்திப் பயனாளிகளுக்கே 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். இவ்வாறு பயனாளிகளை மிரட்டி மகிந்த ராஜபக்ஷவின் பிரசாரக் கூட்டங்களுக்கு மக்களை சமுர்த்தி உத்தியோகத்தர்கள் திரட்டி வருகின்றனர் என குற்றஞ் சாட்டப்படுகின்றது.

எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் உச்சம் அடைந்துள்ளன. இந்நிலையில் பிரசாரக் கூட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாளை வருகிறார்.
மகிந்த பங்கேற்கும் கூட்டங்களில் பெருந்திரளான மக்கள் பங்கேற்க வேண்டும் என அவர் சார்ந்த கட்சியினருக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அக்கட்சியினர் சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் சேர்ந்து சமுர்த்திப் பயனாளிகளை சந்திக்கின்றனர்.
இதன்போது அவர்கள், மகிந்தவின் கூட்டங்களில் பயனாளிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் அவ்வாறு பங்கேற்றாலே வீட்டின் சிறு திருத்த வேலைகளுக்காக வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவின், முதல் கட்டக் கொடுப்பனவான 2 ஆயிரத்து 500 ரூபா வழங்கப்படும் என்றும் வற்புறுத்தி வருகின்றனர்.
அத்துடன் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக வாகன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறிவருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக யாழ். மாவட்ட சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர் ஆர்.ரகுநாதனை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தெரிவித்த விடயங்கள் வருமாறு,
சமுர்த்தி ஊடாக வழங்கப்படும் கொடுப்பனவை யாழ். மாவட்டத்தில் 53 ஆயிரத்து 900 குடும்பங்கள் பெறத் தகுதி பெற்றுள்ளன. இவரக்ளுக்கான 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு ஏற்கனவே அவர்களின் பெயரில் வைப்புச் செய்து புத்தகங்களிலும் பதிவாகிவிட்டது.
இனி அந்தப் பணத்தை பயனாளிகள் தவிர வேறு எவரும் பெறவோ, மீளப் பெறவோ முடியாது.
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எவரேனும் பயனாளிகளை பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்குமாறு வற்புறுத்தினால் உடனடியாக சமுர்த்தி தலைமையகத்துக்கு அறிவியுங்கள்.
குறித்த உத்தியோகத்தர்கள் மீது உடன் நடவடிக்கை எடுப்பதுடன் பயனாளிகளின் இரகசியமும் பேணப்படும். என்றார்.

Post a Comment

0 Comments