Ticker

6/recent/ticker-posts

ஆட்சிமாற்றத்தில் முஸ்லிம்கள் காத்திரமான பங்களிப்புச் செய்ய வேண்டும் – நஜா முஹம்மத்

‘நல்லாட்சியை நோக்கிய ஆட்சிமாற்றத்தில் முஸ்லிம்கள் காத்திரமான பங்களிப்புச் செய்ய வேண்டும் என NFGG செயலாளர் நஜா முஹம்மத் தெரிவித்துள்ளார்.
இன்று குருநாகல் மாவட்ட முஸ்லிம் சம்மேளனம் ஏற்பாடு செய்த பொது வேட்பாளரை ஆதரிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குருநாகல் மாவட்ட ஐ.தே.கட்சியின் அமைப்பாளர் சஹாப்தீன் ஹாஜியாரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐ.தே.க தலைவர்
ரணில் விக்ரமசிங்க, ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களான அகில விராஜ் காரியவசம், பாலித ரங்க பண்டார, அசோக அபேசிங்க, அ.இ.ம.கா தலைவர் ரிஷாத் பதியுத்தீன், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய நஜா முஹம்மத் ;
‘நாம் எதிர் நோக்கியுள்ள 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும் . தற்போதைய அரசியலமைப்பிலுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் 2010 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அவர்கள் கொண்டுவந்த 18 ஆவது திருத்தச்சட்டமூலமும் இந்நாட்டின் முழு அரச இயந்திரத்தையும் ஒரு தனிநபரின் அதிகாரத்திற்குள் கொண்டுவந்திருக்கின்றது . இதனால் நாட்டில் ஒரு பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது .இந்த அரசியல் நெருக்கடியிலிருந்து இந்நாட்டை விடுவிப்பதற்கான ஒரு போராட்டமாகவே இந்தத்தேர்தல் மாறியுள்ளது .
இந்த நாட்டின் சகல இன மக்களும் இவ்வாறான அரசியலமைப்பு முறை மாற்றத்திற்கு அணி சேர்ந்துள்ளனர் . இந்த அணியில் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒன்று சேர்ந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆகவே இப்போராட்டத்தில் முஸ்லிம்கள் காத்திரமான பங்களிப்பை ஆற்ற வேண்டும். முஸ்லிம்களிடத்தில் சுமார் 15 லட்சம் வாக்குகள் உள்ளன. இதில் குறைந்த பட்சம் 10 லட்சம் வாக்குகளையாவது பொது வேட்பாளருக்கு நாம் பெற்றுக்கொடுக்க வேண்டும். அப்போது பொது வேட்பாளர் பெரும் வாக்குகளில் இது அண்ணளவாக 18 வீதமாகும். ஆகவே இந்த தேசிய அரசியலில் முஸ்லிம்களின் பங்களிப்பு 20 வீதமாக இருக்கும். அதே போன்று குருநாகலையில் 1 லட்சம் முஸ்லிம் வாக்குகள் உள்ளன. இவ்வாக்குகள் மைத்திரிக்கு வழங்கப்படுமிடத்து முஸ்லிம்கள் மைத்திரிக்கு வழங்கிய வாக்குகளில் 10 வீதமானவர்களாக நீங்கள் மாறுவீர்கள் ‘ எனத் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments