பெஷாவர் ராணுவப் பாடசாலை தாக்குதலில் 134 குழந்தைகள் உட்பட 150 பேர் பலியானதையடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்,அவரது புது மனைவி ரேஹம் கான் ஆகியோர் அந்தப் பாடசாலைக்கு வருகை தந்தனர்.
ஆனால், அங்கு தம்பதியினருக்கு பெற்றோரின் கோபாவேசமே வரவேற்பாகக் கிடைத்தது.
கொலைவெறித் தாக்குதல் நடைபெற்ற பள்ளிக்கு இம்ரான் தன் புது மனைவி ரேஹம் கானுடன் மாணவர்களைச் சந்திக்க வருகை தந்தார்.
அப்போது அங்கு குழுமியிருந்த பெற்றோர்கள் ‘போ இம்ரான் போ’ என்று அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியதோடு, உள்ளே செல்ல வழியை மறித்தனர்.
அதில் ஒருவர் மிகவும் கோபமாக, “எங்கள் குழந்தைகளின் ரத்தத்தில் அரசியலைக் கலக்காதே” என்று கூறினார்.
மற்றொருவர், “திருமண வேலையில் சுறுசுறுப்பாக இருந்த இம்ரான் கானுக்கு ஒரு மாதம் கழித்தே இந்தப் பள்ளி கண்ணுக்கு தெரிந்திருக்கிறது” என்று ஆவேசப்பட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்டதால் பொலிஸார் குறுக்கிட நேரிட்டது, பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. ஆனாலும் பிரதான நுழைவாயில் வழியாக இம்ரான் கானையும் அவரது மனைவியையும் மக்கள் அனுமதிக்க மறுத்தனர்.
பிறகு, இருவரும் பாடசாலையின் பின்பக்க வாயில் வழியாக உள்ளே வந்தனர்.
தனக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் பற்றி இம்ரான் கூறுகையில், “அவர்களது துயரத்தை நான் முழுதும் புரிந்து கொள்கிறேன். தங்கள் குழந்தைகளை அவர்கள் இழந்துள்ளார்கள். அவர்கள் போராட்டத்தை நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால் மாணவர்களுக்கு தைரியமூட்டவே நான் வந்தேன்.” என்று கூறினார்.

0 Comments