Ticker

6/recent/ticker-posts

தேர்தல் நடத்தை விதிமீறல் : அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்விக்கு ஓராண்டு சிறை

தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் இந்திய  மத்திய இணையமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான முக்தர் அப்பாஸ் நக்விக்கு உத்தரப் பிரதேச நீதிமன்றம் நேற்று ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கடந்த 2009 மக்களவைத் தேர்தலின்போது உத்தரப் பிரதேசம் ராம்பூர் பகுதியில் முக்தர் அப்பாஸ் நக்வி பிரச்சாரம் செய்தார். அப்போது அவரது காரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நக்வியும் அவரது ஆதரவாளர்களும் அங்குள்ள போலீஸ் நிலையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டனர்.


இந்த வழக்கு உத்தரப் பிரதேசம், ராம்பூர் நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் மணீஷ் குமார், நேற்று தீர்ப்பு வழங்கினார். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக முக்தர் அப்பாஸ் நக்விக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தார். இந்த வழக்கில் மேலும் 18 பேர் குற்றவாளிகள் என்று மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.

முக்தர் அப்பாஸ் நக்விக்கு ராம்பூர் நீதிமன்றம் பின்னர் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறியபோது, 2009-ம் ஆண்டில் ராம்பூரில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால் அரசியல் சதி காரணமாக நக்வி மீது அபாண்டமாக குற்றம் சாட்டப்பட்டு இப்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தன. மத்திய அமைச்சரவையில் முக்தர் அப்பாஸ் நக்வி சிறுபான்மையினர் நலத் துறை இணையமைச்சராக உள்ளார்.

Post a Comment

0 Comments