Ticker

6/recent/ticker-posts

முன்னாள் இந்திய பிரதமர் மரணத்தில் நீடிக்கும் மர்மம்!

இந்தியாவின் தீராத மர்மங்களில் இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மரணமு இடம் பிடித்திருக்கிறது. 

லால் பகதூர் சாஸ்திரி இந்திய சுதந்திரப் போராட்டக் காலங்களில் தேசிய காங்கிரசின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தவர்.
சுதந்திர இந்தியாவின் நேருவின் அமைச்சரவையில் தொடர்ந்து பதவி வகித்த போதும், பெரிதாய் பரபரப்பாய் வெளியில் தெரியாத அமைதியான அரசியல்வாதியாகவே இருந்தவர்.


மே-27, 1964ல் நிகழ்ந்த நேருவின் மறைவுக்குப் பின்னர் இந்திராகாந்தியை பிரதமராக்குவதற்கு முன்னிலைப்படுத்திய நிகழ்வுகளை இந்திரா மறுத்ததால் லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் இரண்டாவது பிரதமராகப் ஜூன், 1964ல் பொறுப்பேற்றார்.

நாடு முழுவதும் உணவுப்பஞ்சம் நிலவியபோது சாஸ்திரி நாட்டு மக்களை தலைக்கு ஒரு உணவை அரசாங்கத்திடம் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறு பெறப்படும் உணவை பதப்படுத்தி பஞ்சம் நிலவும் ஏரியாக்களில் விநியோகிக்க திட்டமிட்டார்.

தமிழகத்தில் நடைபெற்ற மொழிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்ததிலும் சாஸ்திரியின் பங்கு மிக முக்கியமானது. இந்தித்திணிப்பை விரும்பாத மாநிலங்களில் ஆங்கிலமே தொடர்ந்து மத்திய அரசு மொழியாக நீடிக்கும் என்று சாஸ்திரி வழங்கிய உத்திரவாதத்திற்குப் பிறகே மொழிப்போர் போராட்டங்கள் அமைதியடைந்திருக்கின்றன.

1964ல் சாஸ்திரி அப்போதைய சிறிலங்கன் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்கேவுடன் ஒரு உடன்படிக்கை மேற்கொண்டுள்ளார். சிறிமாவோ-சாஸ்திரி அல்லது பண்டாரநாயக்கே-சாஸ்திரி என்றழைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் முக்கிய சரத்துகளின்படி ஆறு இலட்சம் இந்தியத் தமிழர்கள் இந்தியாவில் மீள் குடியமர்த்தப்படவேண்டும்.
மூன்று இலட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம் தமிழர்களுக்கு சிறிலங்க குடியுரிமை வழங்கப்படவேண்டும். இவையனைத்தும் அக்டோபர்-31,1981க்குள் நிறைவேற்றப்படவேண்டும். சாஸ்திரியின் மறைவுக்குப்பின்னர் 1981 நிலவரப்படி இந்தியா மூன்று இலட்சம் தமிழர்களை இந்தியாவில் மீள்குடியமர்த்தியிருக்கிறது.

சிறிலங்கா 1,85,000 தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கியிருக்கிறது. அதன்பிறகு இந்தியாவாலேயே இந்த ஒப்பந்தம் காலாவதியானதாக சொல்லப்பட்டு நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்பது காலத்தின் கொடுமையே.

செப்டம்பர்,1965ல் இந்தோ-பாக் இரண்டாம் யுத்தம் தொடங்கியது. இந்தப்போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ரஷ்யா ஏற்படுத்திய சமாதானப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு ஜனவரி-10,1966ல் பிரபலமான தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரில் பாகிஸ்தான் அதிபர் அயூப் கானுடன் கையெழுத்திட்டார் சாஸ்திரி.

ஜனவரி-11, 1966ல் அதாவது தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாளே சாஸ்திரி ரஷ்யாவில் தான் தங்கியிருந்த அறையில் அதிகாலை 1.32க்கு மாரடைப்பால் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இறப்பிற்கு பின்னர் சாஸ்திரியின் உடல் நீல நிறமாக மாறியதால் சாஸ்திரியின் குடும்பமும், எதிர்க்கட்சிகளும், பெரும்பாலான நாட்டு மக்களும் சாஸ்திரியின் மரணம் இயற்கையானதல்ல என்று எதிர்ப்பு தெரிவித்தும், கடைசி வரையிலும் அவரது உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments