இன ரீதியான நிர்வாக அலகை ஏற்படுத்தி நாட்டை அபாய நிலைக்குள் தள்ள
எதிரணியினர் முயற்சிக்கின்றனர் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர்
ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித்
தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
இந்த அரசிடம் இனவாதம் இல்லை. மூன்று தசாப்த காலமாக நிலவிய யுத்தத்தை
முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். பொது எதிர்க்கட்சியில்
உள்ளவர்கள் ஆரம்பம் முதலே முரண்பாடான கருத்துக்களையே கூறிவருகின்றனர். யாழ்ப்பாணம் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா 'மிஸ்டர்' பிரபாகரன்
என்று கூறியிருந்தார்.
அத்துடன், முகாம்கள் அகற்றப்படும், மாகாண சபைகளின் அதிகாரங்கள்
விஸ்தரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஆனால், முகாம்கள்
அகற்றப்படமாட்டாது, மாகாண சபைகளின் அதிகாரங்களைக் குறைத்து, ஆளுநரின்
அதிகாரங்களை அதிகரிக்க வேண்டும் என்று சம்பிக்க ரணவக்க கூறுகின்றார்.
இவர்கள் இருவரது கருத்துக்கள் வானமும், பூமியும் போன்றவை. இந்த எதிரணியின்
கூட்டணியால் நாட்டில் பாரிய பெரும் சவால் உருவாகியுள்ளது. தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு தனக்கென தனி நிர்வாக அலகையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தனக்கென தனி நிர்வாக அலகையும் கோருகின்றன.
ஒவ்வொரு இனத்தவருக்கும் ஏற்றவகையில் தனி நிர்வாக அலகை வழங்கினால் நாட்டின்
இன நல்லிணக்கத்தைப் பேண முடியாது. உள்நாட்டில் புலிகள் ஆயுத ரீதியாக
தோற்கடிக்கப்பட்டாலும், புலம்பெயர் தேசத்தில் அவர்களின் செயற்பாடுகள்
தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இம்மானுவேல், ருத்திரகுமாரன் போன்றோர்
தமிழீழத்தைப் பெறும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால்
எம்முன்னே பெரும் சவால் உள்ளது. மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற யுத்தத்தை
முடிவுக்கு கொண்டுவந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எமது மக்கள் மறக்க
மாட்டார்கள்" என்றார்.

0 Comments