எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகி, என்னதான் முடிவு வந்தாலும்
எங்களுக்குத் தேவை இல்லை. எங்களது தீர்மானமே இனி நடக்கும் என்று கட்சி
ஆதரவாளர்கள் இறுதி முடிவெடுத்திருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை
முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்ட தீர்மானமானது அந்தக் கட்சியை ஆதரிக்கும்
முஸ்லிம் மக்களிடம் பெருவரவேற்பை பெற்றிருந்தது.
எங்களது முடிவை உடனேயே
அறிவித்தால் அது எதிர்த்தரப்பினருக்கு
எம்மீதான சேறுபூசும் கால எல்லையை
நாம் அதிகம் வழங்கியதாகி விடும். அதன் காரணமாகவே முடிவை வெளியிடுவதில் இந்த
தாமதம் என கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்
தெரிவித்திருந்தார்.
அது மட்டுமின்றி, 18 ஆவது திருத்தச்
சட்டமூலத்துக்கு தாம் ஆதரவளித்தமைக்கான பிராயச் சித்தமே இந்த மாற்று முடிவு
என்றும் அவர் கூறியிருந்தார். அவர்கள் தரப்பில் இவ்வாறான காரணங்கள் பல
கூறப்பட்டாலும் மக்கள் தரப்பில் சந்தேகங்கள் இருந்தமையும் உண்மையே.
இருப்பினும் மக்கள் வழக்கமாக அனைத்தையும் மறந்து விட்டு கட்சியின்
தீர்மானத்தை வரவேற்று பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தனர்.
ஆனால், அரசாங்க
தரப்போ தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்வைக்கப்பட்ட கல்முனை
கரையோர மாவட்ட கோரிக்கையை கையில் எடுத்துக் கொண்டு அதற்கு பிரிவினைவாத
முலாம் பூசி தென்னிலங்கை சிங்கள மக்களிடையே தனக்கான ஆதரவைத் தேடும்
முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை கொழும்பில்
இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் அமைச்சரும் பொதுசன ஐக்கிய மக்கள்
கூட்டமைப்பின் செயலாளருமான சுசில் பிரேம்ஜயந்த் சில விடயங்களைச்
சிலாகித்திருந்தார். பெரும்பாலும் அவரது கருத்துகளில் கல்முனை கரையோர
மாவட்ட விவகாரமே முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தது.
இந்தக் கோரிக்கை
முஸ்லிம் காங்கிரஸினால் முன்வைக்கப்பட்ட போது பிரிவினை வாதத்தை
உருவாக்கக் கூடிய எந்தவொரு செயற்பாட்டையும் வாக்குகளுக்காக தன்னால்
அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதிபட தெரிவிருந்தார்
என்றும் இதே போன்றதொரு வடிவத்திலேயே தமிழீழ விடுதலைப் புலிகளும் வடக்கு,
கிழக்கில் தனியானதொரு நிர்வாக மாவட்டம் கோரியிருந்ததாகவும் சுசில்
பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் தனியான கரையோர
நிர்வாக மாவட்டமொன்றை உருவாக்கித்தர எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால
சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் இணங்கியதன் காரணமாகவே ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி தேர்தலில் எதிரணியை
ஆதரிக்க தீர்மானித்திருப்பதாகவும் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.
மேலும் நாட்டை மட்டுமல்ல.. மாவட்டத்தைக் கூட பிரிக்க ஜனாதிபதி அனுமதிக்க
மாட்டார் என்பதும் அவரது கருத்தாக இருந்தது. இதனை கடந்த வருடத்தின் இறுதி
மாத காலத்தில் தெரிவிக்கப்பட்ட மிகப் பெரிய அரசியல் ஜோக்காகவே கருதலாம்.
கல்முனை கரையோர மாவட்ட கோரிக்கையானது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்
மட்டுமே புதிதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்வைக்கப்பட்ட
ஒன்றல்ல. கிழக்கு மாகாண சபை தேர்தல் இடம்பெற்ற காலத்தில் அரசாங்கமானது
அங்கு ஆட்சியமைக்க முடியாத ஒரு தொங்கு நிலையிலிருந்த போது முஸ்லிம்
காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆட்சியமைக்க ஆதரவு தருவதாயின்
தங்களது கல்முனை கரையோர மாவட்ட கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று
முஸ்லிம் காங்கிரஸ் அரசைக் கேட்டிருந்தது. அதன்போது அரசாங்கமும் இதே
ஜனாதிபதியும் அன்று அதனை ஏற்றுக் கொண்டு நிறைவேற்றுவதாக வாக்குறுதியும்
அளித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்தக் கோரிக்கை அன்று
முன்வைக்கப்பட்ட போது பிரிவினைவாதத்தை உருவாக்கக் கூடிய எந்தவொரு
செயற்பாட்டையும் வாக்குகளுக்காக தன்னால் அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ ஏன் தெரிவிக்கவில்லை? அவ்வாறு அன்றே இதற்கு எதிர்ப்புத்
தெரிவித்திருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண ஆட்சிக்கு முட்டுக்
கொடுக்கும் தேவை ஏற்பட்டிருக்காது அல்லவா? அப்போது மட்டும் இந்த விடயம்
பிரிவினை வாதமாகவோ அல்லது விடுதலைப் புலிகளின் கோரிக்கை போன்றோ தெரிய
வில்லை போலும். கிழக்கு மாகாண ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே
போலியாக இந்த விடயத்துக்கு அரசு இணக்கம் தெரிவித்து ஏமாற்றி
இழுத்தடித்துள்ளது என்பது அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தின் இன்றைய இந்தக்
கருத்தின் மூலம் வெளியாகி உள்ளது.
அமீர் அலி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியைப் பெற்றுக் கொண்ட பின்னர் அவரது கட்சி எதிர்தரப்புக்கு மாறியமைக்காக
முனாபிக்குகள், என்று வர்ணிப்போரும் முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு
துரோகமிழைத்து விட்டது என்று கூறி துரோகிகள் என்று பட்டம் சூட்டுவோரும்
அரசாங்கத்தின் இந்த ஏமாற்றுத் தனத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.
மாமியார் உடைத்தால் மண்குடம். மருமகள் உடைத்தால் பொன் குடாமா?
முஸ்லிம்களை மையப்படுத்தி தனியானதொரு நிர்வாக மாவட்டம் உருவாக்க
அனுமதித்தால் அங்கு வாழும் தமிழர்களின் நிலைப்பாடு என்னவாகும் என அரச
தரப்பார் இன்று கேள்வி எழுப்புகின்றனர். கிழக்கு மாகாண சபை ஆட்சியமைப்பது
தொடர்பில் இதே கோரிக்கையை முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்த போது இவ்வாறான
கருத்தை அரச தரப்பினர் கூறாமல் பொத்தி வைத்து விட்டு, இப்போது மட்டும்
தமிழ் மக்கள் மீது பாச மழையை அரசு பொழிகிறது போல்.. தமிழர் தரப்பில்
அச்சத்தை ஏற்படுத்தவும் அவர்களது வாக்குகளைக் கவர்ந்து கொள்ளவுமே இந்தப்
பாச வலையை அரசு தரப்பினர் வீசியுள்ளனர் போல் தெரிகிறது. இதன் மூலம் இரு
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிப்பவர் யார்
என்பதனையும் பொதுசனத்தார் புரிந்து கொள்ள முடியும்.
மேலும் கல்முனை தமிழ்
மக்கள் மீது இவ்வளவு பாசமும் பந்தமும் அரசுக்கு இருந்தால் அங்கு
அவர்களுக்காக எவ்வளவோ விடயங்களைச் செய்து கொடுக்க முடியும்.
இது
இவ்வாறிருக்க, சிரேஷ்ட அமைச்சரான பி. தயாரத்ன இந்த விடயம் தொடர்பில் சில
கருத்துகளை வெளியிட்டுள்ளார். அதாவது, ஹக்கீம் வருவதும் போவதும் வாடிக்கை
என்று கூறுகிறார். அமைச்சர் தயாரத்ன ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட
உறுப்பினராக இருந்தவர். இப்போது ஆளுந்தரப்புக்கு வந்து விட்டு இவ்வாறு
கூறுவது வேடிக்கை அல்லவா? கரையோர மாவட்ட கோரிக்கை கபட நாடகம் என்கிறார்
தயாரத்ன. அவர் சார்ந்த அரசின் கபட நாடகம் காரணமாகவே சிறுபான்மை இனக்
கட்சிகள் அனைத்தும் இன்று எதிர்தரப்புக்குச் சென்றுள்ளன என்பதனை அவர் தனது
மனட்சாட்சியைக் கேட்டு தெரிந்து ஏற்றுக் கொள்பவராக இருக்க வேணடும்.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள்
அமைச்சருமான பஷீர் ஷேகு தாவுத், தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்தமை
தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதமும் இன்று
கட்சி மட்டத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவித்துள்ளது. ஜனாதிபதி
தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவே வெற்றி பெற வேண்டுமென்று தான் இறைவனை
பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதிக்கு எதிராக சேறு புசும் பிரசாரங்களில் தான்
ஈடுபடப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவற்றுக்கும் மேலாக இந்த
நாட்டு முஸ்லிம்களை இறைவனுக்கு அடுத்ததாக பாதுகாக்கக் கூடியவர் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ என்றும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்தவின்
தலைமைத்துவத்தின் கீழ் ஏற்பட்ட அதிருப்தியோ அல்லது நம்பிக்கையின்மை
காரணமாகவோ தாம் தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவில்லை
நாட்டுப்பற்றுள்ள பிரஜையாக அனைத்து மக்களிடையேயும் ஐக்கியத்தை ஏற்படுத்த
ஜனாதிபதி ஆற்றிய சேவையை மறுக்க முடியாது என்றும் கூறியுள்ளார். கட்சியின்
தவிசாளரான பஷீர் ஷேகு தாவுதின் இந்தக் கருத்து இன்று ஆளுந்தரப்பினரின்
வாயில் அள்ளிப் போட்ட சீனி போன்றுதான் உள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பில் இன்னும் எவ்வாறான விடயங்களை இன்னும் சில
தினங்களுக்குள் (பைல்) அரச தரப்புக் கூறப் போகிறதோ தெரியவில்லை அவ்வாறான
கோவைகளை (பைல்களை) யார்தான் அரச தரப்பாருக்கு வழங்குவார்களோ புரியவில்லை
எல்லாம் அந்த இறைவனுக்கே வெளிச்சம்.
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

0 Comments