Ticker

6/recent/ticker-posts

குடும்ப ஆட்சி நடத்தமாட்டேன் : மைத்திரிபால

எனது அரசு பொதுமக்களின் அரசாங்கமாக இருக்குமே தவிர குடும்ப அரசாங்கமாக இருக்காது. நான் மஹிந்த ராஜபக்ஷ போன்று மன்னராட்சி செலுத்தமாட்டேன் என்று பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 
ஏறாவூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இடி அமீனைப்போன்று ஆட்சி செய்யும் மஹிந்தவின் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று இப்பொழுது நாட்டு மக்கள் கங்கணம் கட்டி இருக்கிறார்கள். நீதித்துறை நிர்வாகத்துறை பாதுகாப்பு என்பன சுதந்திரமாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற அதிகாரம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள முப்படையினரையும் தனது குடும்ப நிருவாகத்துக்கு கீழ் கொண்டு வந்தார். வர்த்தகத்துறையை தனது குடும்பத்துக்குரியதாக மாற்றினார். மஹிந்த ஆட்சியின் கீழ் ஜனநாயகம் பறித்தெடுக்கப்பட்டுள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எமது அரசாங்கம் வறுமைக்குரிய மக்களுக்கான அரசாக இருந்து நீதித்துறையை   வலுப்படுத்தி சிறந்த நிருவாக சேவையை ஏற்படுத்துவோம். விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்போம். தொழிலில்லாத பத்து இலட்சம் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்குவோம்.
நான் ஒரு விவாசாயப் பின்னணியைக் கொண்டவன் என்கின்ற அடிப்படையிலே எனது அரசாங்கம் விவசாயிகளின் அரசாங்கமாக இருக்கும். மீனவர்களின் நலன்களும் பேணப்படும். இது பொது மக்களின் அரசாங்கமாக இருக்குமே தவிர குடும்ப அரசாக இருக்காது. நான் மஹிந்த ராஜபக்ஸ போன்று மன்னராட்சி செலுத்தமாட்டேன். 
அவர் இந்த நாட்டு மக்களின் சொத்துக்களைக் கொண்டு மாடமாளிகைகளைக் கட்டியிருக்கிறார். ராஜபக்ஷவின் குடும்ப மன்னர்களின் குடும்பங்களைப்போன்று உல்லாசமாக வாழ்கிறது.
இது சிங்கள தமிழ் முஸ்லிம்களின் நாடு. இன மத மொழி வேறுபாடுகளின்றி இந்த நாட்டை ஆள்வோம். ஆகையினால் எல்லோரும் சகவாழ்வுடனும் இன செளஜயன்யத்துடனும் வாழலாம்.  எல்லோரும் தான் விரும்பும் மதத்தை அனுசரித்துக் கொண்டு ஐக்கியமாக வாழ முடியும். துஸ்பிரயோகம் செய்கின்ற மஹிந்தவுக்கு வாக்களிக்காமல் சிறந்த முறையில் மக்களாட்சியை கொண்டு வரப்போகும் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களியுங்கள் என்றார்.

Post a Comment

0 Comments