சீனாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று சந்திக்கிறார். 4 நாட்கள் பயணமாக சீனா சென்றுள்ள சுஷ்மா ஸ்வராஜ்ஜை அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி வரவேற்றார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுஷ்மா ஸ்வராஜ், வரும் மே மாதம் பிரதமர் மோடி சீனா வர உள்ளதாக தெரிவித்தார். தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். மோடியின் சீன பயணம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளவே தாம் சீனா வந்ததாகவும் அவர் கூறினார்.
கடந்த 26-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற குடியரசுதின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா பங்கேற்றது சீனாவை அதிர்ச்சியடைய வைத்தது என்றும், சீனாவை சமாதானப்படுத்துவதற்காகவே பிரதமர் மோடி மே மாதம் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சீன அதிபர் ஜின்பிங்கை சுஷ்மா ஸ்வராஜ் இன்று சந்திக்க உள்ளார். ஏசியான் நாடுகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் இந்தியா கவனம் செலுத்த ஆரம்பித்துள்ள நிலையில், மே மாதம் நடைபெற உள்ள மோடியின் சீன பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

0 Comments