புகைப்பழக்கம் உங்கள் எலும்பின் வலிமையினைக் குறைக்கும்
புகைப்பழக்கம் இருப்பவர்களிடம் எலும்பின் வலிமை குறையத் தொடங்கிவிடும். இந்தியா மும்பையினைச் சேர்ந்த மருத்துவரான திலீப் இது குறித்து கூறுகையில் “எலும்புகளின் வலிமையினைக் குறைத்து உடையக்கூடிய நிலைக்கு மாற்றும் ‘ஓஸ்டியோபோரோசிஸ்’ எனும் நோய்க்கும், புகைப்பழக்கத்திற்கும் தொடர்புள்ளது. இதில் இளம்பருவத்தினரும் பெண்கள் பாதிப்படையும் வாய்ப்புகள் மிக அதிகம்” என்று கூறினார்.
இடுப்பு, மூட்டுப் பகுதிகள் மற்றும் கழுத்துப் பகுதிகளில் உள்ள எலும்புகளில் இது பாதிப்பினை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. இப்பழக்கம் உடலின் இரத்த அழுத்தத்தினை அதிகரிப்பதுடன் மட்டுமல்லாமல், இதயத்துடிப்பின் அளவினையும் அதிகரிக்கிறது. இதற்கு புகைப்பழக்கத்தினால் உருவாகும் நச்சுப்பொருட்கள் முக்கியக் காரணம்.
புகைப்பழக்கம் இரத்தத்தினை ஒட்டும்தன்மையுடன் மாற்றிவிடும்
புகைப்பழக்கத்தினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதயத்துடிப்பு அதிகரிக்கும் என்று பார்த்தோம். அது எப்படி நடக்கிறது என்பதை இப்போது பார்ப்போம். புகைப்பழக்கத்தினால் உருவாகும் கார்பன் மோனாக்ஸைடு, உடலின் பாகங்களுக்கு இரத்தம், ஆக்ஸிஜனை சுமந்து செல்வதைத் தடுக்கும். சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காத பாகங்களில் வலிகள் ஏற்படத் துவங்கும். இரத்தம் ஒட்டும் தன்மையுடன் மாறிவிடும், அத்துடன் புகைப்பழக்கத்தினால் கொழுப்பு மற்றும் இதர தேவையற்ற பொருட்கள் இரத்தத்தில் அதிகரிக்கத் தொடங்கும். இதன் தொடர்ச்சியாக இதயத்திலும் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கும்.
கண்புரை நோயினை ஏற்படுத்தும்
புகைப்பிடிப்பதினால் வரும் முதல் பாதிப்புகளில் கண்களின் மேற்ப்பரப்பில் ஏற்படும் அரிப்பு, வறட்சி, எரிச்சல் மற்றும் கண் சிவத்தல் போன்றவை முக்கியமானவை. இப்பழக்கத்தினால் இரத்த ஓட்டத்தில் கலக்கும் ரசாயனங்கள் தேவையற்ற பொருட்களைத் தோற்றுவிக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு இருக்கும் புகைப்பழக்கத்தினால் குழந்தைகள் பிறக்கும்போதே நோயுடன் பிறக்கும் வாய்ப்புகளும் அதிகமுள்ளது.
கண்களில் ஏற்படும் கண்புரை நோய்க்கும், புகைப்பழக்கத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகவும், கண்களின் லென்சுகளை ஆரோக்கியமாக வைக்கக்கூடிய பொருட்களை நச்சுப்பொருட்கள் பாதிப்பதால் இந்தப் பிரச்சினைகள் வருவதாகவும் கண் மருத்துவரான டாக்டர் தவான் கூறியுள்ளார்.
விந்துவில் உள்ள மரபணுக்களைப் பாதிக்கும் புகையிலையின் நச்சுப்பொருட்கள்
ஆண்களில் புகைப்பழக்கம் இல்லாதவர்களைக் காட்டிலும், புகைப்பழக்கம் உள்ளவர்களிடம் ஆண்மைக் குறைவு ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. ஆண்களின் உடலில் கலக்கும் நச்சுப்பொருட்களால் ஆண்குறிக்கு தேவையான அளவிற்கு இரத்த ஓட்டம் கிடைப்பதில்லை. புகைப்பொருட்களில் காணப்படும் பொருட்களான நிகோடின், கேட்மியம், பென்சோபைரின், புகையிலை போன்றவை ஆண்களின் விந்துச் செல்களிலுள்ள மரபணு சார்ந்த பொருட்களைக் குறைக்கிறது. ஆண்குறியில் புற்றுநோய் ஏற்பட்ட சில அரிதான நிகழ்வுகளும் இந்த புகைப்பழக்கத்தினால் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடலில் சுருங்கங்கள் ஏற்படும், உடல் நிறத்தினை மாற்றும்
புகைப்பழக்கத்தினால் உடலில் சுருக்கங்கள் ஏற்படும், சில வேளைகளில் உடலின் நிறமே மாறும் நிலையும் ஏற்படலாம். புகைப்பிடிப்பவர்களுக்கு வழக்கமாக வாய்ப்பகுதியில் உள்ள தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதுண்டு. கண்களுக்குக் கீழே கோடுகள் போன்ற வரிகள் ஏற்படுவதுண்டு.
மோசமான சுவாசப் பிரச்சினைகள், வண்ணம் மாறிய பற்கள்…..
தொடர் புகைப்பழக்கத்தினால் பற்கள் மற்றும் வாய்ப்பகுதி பல பிரச்சினைகளைச் சந்திக்கின்றன. அதில் மோசமான சுவாசப் பிரச்சினைகள், பற்களின் நிறம் மாறுவது, பற்சிதைவிற்குக் காரணமாகும் சுண்ணாம்பு போன்ற பொருட்கள் பற்களில் உருவாவது மற்றும் பற்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவை முக்கியமானவை. இவற்றிற்கெல்லாம் மேலாக வாய்ப் புற்றுநோயினையும் இவை ஏற்படுத்தவல்லது.
உடலின் நச்சுத்தன்மையினை அதிகரிக்கும்
அதிகப்படியான நச்சுப்பொருட்கள் புகைப்பிடித்தலின் மூலம் நமது உடலில் அதிகரிக்கின்றன. இவை விரைவாக இரத்த ஓட்டத்தில் பங்கேற்று உடல் முழுவதும் பரவுகின்றன. இதனால் பிற நோய்களுக்கு எதிராக போராடக்கூடிய தன்மை உடலில் வெகுவாகக் குறைகிறது. இது பிற நோய்களை வரவேற்பது போலவும் அமைந்துவிடுகிறது.
காயங்களை விரைவில் குணப்படுத்தவிடாது
நாம் எந்தவகையான சிகிச்சை முறைகளை எடுத்துக்கொண்டாலும் இறுதியில் காயங்கள் ஆறுவதுதான் அதன் முக்கிய நோக்கமாக அமையும். உடலின் காயங்களைக் குணப்படுத்தவிடாமல் செய்யும் காரணிகள் பலவகைகள் உள்ளன. அதில் உடலின் திசுக்களில் ஏற்படுத்தும் பாதிப்பினால், காயங்கள் ஆறுவதைத் தாமதமாக்கும் புகைப்பழக்கமும் ஒன்று.
நுரையீரல், மார்பகம், வயிறு, கணையம், சிறுநீர்ப்பை புற்றுநோய்
பெரும்பாலான இடங்களிலும், சிகிச்சை முறைகளிலும் நாம் நுரையீரல் புற்றுநோயினை மட்டும்தான் பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். ஆனால், புகைப்பழக்கத்தினால் உடலின் பல உறுப்புகளில் புற்றுநோய் வரலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? உடலின் அனைத்து பாகங்களும் புகைப்பழக்கத்தினால் பாதிக்கப்படலாம். நுரையீரல் புற்றுநோய் தவிர மார்பகப் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், கணையப் புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய், வாய்ப் புற்றுநோய் மற்றும் கருப்பைப் புற்றுநோய் போன்ற புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன.
இத்தனை விளைவுகளையும் ஏற்படுத்தும் புகைப்பழக்கம் இன்றளவும் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. இதுகுறித்து உங்கள் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். அப்போதுதான் இப்பிரச்சினைகளில் இருந்து சற்று விலகியாவது இருக்க முடியும்.
.
0 Comments