Ticker

6/recent/ticker-posts

கமலினி - சில நினைவுகள்!

உடல்நல குறைவால் காலமான கமிலினி செல்வராஜனின் சில நினைவலைகள்.

அன்னாரது உடல் நாளை காலை 8.30 மணி முதல் பொரள்ளை ஜயரத்ன மலர்ச் சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் நண்பகல் 12 மணி அளவில் இறுதிக்கிரியைகள் இடம்பெறும் என அவரது குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சுமார் 1.30 மணி அளவில் அன்னாரின் பூதவுடல் பொரள்ளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கமலினி செல்வராஜன் பற்றிய நினைவுகள்…

இலக்கியவாதியும், எழுத்தாளருமான தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளைக்கும் வயலின் கலைஞர் தனபாக்கியம் ஆகியோருக்கு மூத்த மகளாக பிறந்தவர் கமலினி.

இவர் 1953 ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி யாழ்ப்பாணம், தென்புலோலியில் பிறந்தார். உடல் நலக்குறைவால் சிகிச்சைபெற்று வந்த இவர் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

கமலினி இலங்கைத் தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகையுமாவார். இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற ‘கோமாளிகள்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். ‘ஆதர கதாவ’ என்ற சிங்களத் திரைப்படத்தில் தமிழ்ப் பெண்மணியாக கதாபாத்திர ஏற்று நடித்திருந்தார் கமலினி.

வானொலி தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்பாளரும் ஆவார். இவர் கவிஞர் சில்லையூர் செல்வராசனின் துணைவி ஆவார். சுமார் 30 வருடங்கள் தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராக கடமையாற்றினார்.

கமலினி கொள்ளுப்பிட்டி சென். அந்தனிஸ் பாடசாலையில் பாலர் வகுப்பில் இணைந்து, பின்னர் பம்பலப்பிட்டி சென். கிளயர்ஸ் மகளிர் பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்றார்.

களனிப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். தந்தை மு. கணபதிப்பிள்ளை இலங்கை வானொலியில் இலக்கியப் பங்களிப்பு வழங்கியபோது அவரது நண்பராக இருந்த கவிஞர் சில்லையூர் செல்வராசனைக் காதலித்துத் திருமணம் புரிந்து கொண்டார்.

1995 ஆம் ஆண்டில் கணவர் செல்வராசனின் இறப்பை அடுத்து இவர் கொழும்பில் தனது மகன் அதிசயனுடன் வசித்து வந்தார்.

சில்லையூர் செல்வராசன் எழுதிய ´தணியாத தாகம்´ வானொலித் தொடர் நாடகத்தில், குடும்பத்தின் இளைய மகளாக ´கமலி´ பாத்திரத்தில் இவர் நடித்தார். இலங்கை வானொலியில் ´கலைக்கோலம்´ முதலான சஞ்சிகை நிகழ்ச்சிகள் பலவற்றை தயாரித்து வழங்கியிருக்கிறார்.

ரூபவாகினியில் ஒளிபரப்பான அருணா செல்லத்துரையின் நெறியாள்கையில், கே. எஸ். பாலச்சந்திரன் எழுதிய ´திருப்பங்கள்´, எஸ். ராம்தாசின் ´எதிர்பாராதது´, எஸ். எஸ். கணேசபிள்ளை எழுதிய ´சமூக சேவகி´ போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். ரூபவாகினியிலும், ஐ.ரி. என் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி வந்தார்.

இவர் நாட்டுக்கூத்துக்கு வழங்கிய பங்களிப்புக்காக கலாசார அமைச்சின் விருது 1995 ஆம் ஆண்டும், கொழும்பு றோயல் கல்லூரி நாடகத் துறைக்காக ஆற்றிய பங்களிப்புக்காக கொழும்பு றோயல் கல்லூரியின் விருது 2008 ஆம் ஆண்டும், நோர்வே கலை மன்றம் நாட்டுக்கூத்து பாரம்பரியத்தை பேணி வளர்ப்பதில் காட்டிய ஆர்வத்திற்கான கெளரவ விருது 2010 ஆம் ஆண்டும், 35 ஆண்டு கலைச் சேவையைப் பாராட்டி கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில் இளைஞர் நற்பணி மன்றம் கௌரவ விருது வழங்கியும் இவரை கெளரவித்தது.

Karudan News

Post a Comment

0 Comments