Ticker

6/recent/ticker-posts

வெளிநாட்டு வங்கிகளில் இரகசியக் கணக்குகள் ஏதும் இல்லை: மஹிந்த ராஜபக்ஷ

தானோ, தன்னுடைய மனைவியோ, பிள்ளைகளோ எந்தவொரு வெளிநாட்டு வங்கியிலும் சட்டவிரோதமான முறையில் இரகசியக் கணக்குகள் எதனையும் வைத்திருக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
முன்னாள் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் தாமும், தமது மனைவியும், மகன்மாரும் பில்லியன் கணக்கான டொலர்களுக்கு வங்கிக் கணக்குகளை வைத்திருப்பதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் வதந்திகளைப் பரப்புகின்றனர்.

மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கணக்குகள் எனக் கூறி காலத்துக்கு காலம் சீஷேல்ஸ் நாட்டுக்கும் விசேட தேடுதல் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. தேடுதல் நடவடிக்கைகளில் அமெரிக்க இந்திய நிதிப் புலனாய்வு அமைப்புக்களும் இணைகின்றன.
துபாயில் 1064 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு முன்னணி குடும்பம் ஒன்று கணக்கு வைத்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ரொயிட்டர் செய்திச் சேவைக்கு சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அரசாங்க முக்கியஸ்தர் ஒருவரும் இத்தகைய இரகசிய வங்கிக் கணக்கு வைப்பு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் பிரஸ்தாபித்துள்ளார். எனது அரசியல் எதிரிகள் செளகரியமான ஆயுதமாக இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகின்றனர்.
சர்வதேச நெறியாள்கை வட்டாரங்களின் கவனத்தை மீறி இத்தகைய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட இயலாது. நிதிக் கையாடல்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளும் அதிகம் உள்ளது. எனது புதல்வர்களின் பாவனைக்காக ஹெலிகொப்டர்கள் கொள்வனவு செய்யப்பட்டன. பக்கிங்ஹாம் மாளிகையிலிருந்து குதிரைகளும் கொண்டு வரப்பட்டன என்றெல்லாம் வதந்திகளை பரப்பும் இதே நபர்கள் குறித்து பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.” என்றுள்ளது.

Post a Comment

0 Comments