Ticker

6/recent/ticker-posts

தமிழ் முற்போக்குக் கூட்டணி உதயம்; புதிய வரலாறு படைப்போம்: மனோ கணேசன் உறுதி!

இலங்கை அரசியலரங்கில் தமிழ் முற்போக்குக் கூட்டணி என்கிற புதிய கட்சி ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

உதயமான இந்தக் கட்சி காலத்தின் பணியைப் பூர்த்தி செய்து, நம்நாட்டு அரசியல் பரப்பில் புதிய வரலாறு படைக்கும் என்று அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை கட்சி அங்குரார்ப்பண நிகழ்வுடன் ஊடக மாநாடும் நடைபெற்றது.
ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சி பிரதிநிதிகள் மத்தியில் கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்ட பேச்சுக்கள் சுமுகமாக முடிவுற்றதையடுத்து சம்பந்தப்பட்ட மூன்று கட்சிகளின் தலைவர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், வி. இராதாகிருஷ்ணன் ஆகியோர் தமது கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர். இதனூடாக புதிய கட்சி உருவாக்கப்பட்டது.

அதன்போது கருத்து தெரிவித்த கட்சி தலைவர் மனோ கணேசன், “எமது கூட்டணி மத்திய மாகாணத்தின் நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய இடங்களிலும், மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய இடங்களிலும், ஊவா மாகாணத்தின் பதுளையிலும், சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை ஆகிய இடங்களிலும், வட மேல் மாகாணத்தின் புத்தளத்திலும் வாழும் தமிழ் பேசும் மக்களை அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பாகச் செயற்படும்.

இலங்கையில் 31 இலட்சத்து, 13 ஆயிரம் (3,113,247) தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களில் வடக்கு, கிழக்கில் 16 இலட்சத்து 11 ஆயிரத்து 36 பேர் வாழ்கின்றனர். வடக்கு, கிழக்கிற்கு வெளியே 15 இலட்சத்து இரண்டாயிரம் (1,502,211) தமிழர்கள் வாழ்கின்றனர். இவ்வாறு வாழும் மக்களை தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் நமது தமிழ் முற்போக்குக் கூட்டணி பிரதிநிதித்துவம் செய்ய விளைகிறது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் எமது சகோதர தமிழ் உடன்பிறப்புகளை அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவம் செய்யும் தலைமை அரசியல் அமைப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாம் காண்கிறோம். இந்த மாகாணங்களில் குறிப்பாக கிளிநொச்சி மற்றும் வன்னி மாவட்டங்களில் வாழும் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட பெருந்தொகை மக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதிநிதித்துவம் செய்கின்றது. நமது இரண்டு கூட்டு அமைப்புகளுக்கு இடையிலும், பிரிவுபடாத இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடைவது என்ற இலக்கு தொடர்பில் ஒரு புரிந்துணர்வு இயல்பாகவே ஏற்படும் என நாம் எதிர்பார்கின்றோம்.” என்றும் அவா் கூறினாா்.

Post a Comment

0 Comments