மியான்மாரில் பொதுத் தேர்தல் நடைபெற 3 மாதங்கள் உள்ள நிலையில் அங்கு சக்தி வாய்ந்த ஆளும் கட்சியின் தலைவர் துரா உஷ்வே மன் அந்நாட்டு அதிபர் தெயின் செயின் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ளதால் அங்கு அரசியல் பதற்ற நிலை நிலவுகின்றது.
மேலும் இராணுவத்தின் பின்புலத்துடன் ஆளும் கட்சி இயங்கி வருவதால் துரா உஷ்வே மன் பதவி நீக்கம் செய்யப் பட்டதை அடுத்து பாதுகாப்புப் படையினர் தலைநகர் நேய்ப்பிட்டாவில் அமைந்துள்ள ஆளும் USDP கட்சித் தலைமையகத்தை சுற்றி வளைத்துள்ளனர்.
மியான்மார் அரசியலில் தற்போது தாக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கும் 15 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் இருந்த எதிர்க் கட்சித் தலைவியான ஆங் சான் சூ குய் உடன் உஷ்வே மன் உத்தியோகபூர்வமற்ற முறையில் கூட்டணி அமைக்க முயன்ற குற்றச்சாட்டின் காரணமாகவும் USDP கட்சியின் முன்னணி அதிபர் வேட்பாளரும் அதிபர் தெயின் செயினின் முக்கிய போட்டியாளரும் இராணுவத்தில் முன்பு 3 ஆவது முக்கிய புள்ளியாகவும் விளங்கிய அவர் பதவி நீக்கம் செய்யப் பட்டு தலைநகர் நேய்ப்பிட்டாவில் வீட்டுச் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். 1962 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் இராணுவத்தின் பிடியில் சிக்கிய மியான்மாரின் ஆட்சி முறை நவம்பர் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக் கூட்டணியின் தலைவியும் சமாதானத்துக்கான நோபல் பரிசு வென்றவருமான ஆங் சான் சூ குய் வெற்றியுடன் முடிவடைந்து அந்நாடு சர்வாதிகாரத்தில் இருந்து விடுதலை அடையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே அங்கு நிலவி வருகின்றது.
ஆனால் ஆங் சான் சூ குய் வெற்றி பெற்றாலும் அவர் அந்நாட்டு அதிபராக வருவதற்கு சட்ட ரீதியாக பல முட்டுக் கட்டைகள் இருந்தே வருகின்றன. அதாவது புதிய அதிபர் ஒரு வெளிநாட்டுக் குடிமகளாக இருக்க முடியாது என்பதுடன் அவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பாராளுமன்றத்துக்கே உரியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
4tamilmedia.com

0 Comments