Ticker

6/recent/ticker-posts

தனது மரண செய்தியை வானொலியில் கேட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1948 வரை உயிர் வாழ்ந்தார்?

இந்திய தேசிய ராணுவம் என்ற போராளிகள் பட்டாளத்தை உருவாக்கி, இந்திய விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தி, வெள்ளையர் அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். 

இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவில் இருந்து வெளியேறி, ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்ற சுபாஷ் சந்திர போஸ், பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து போரிட்ட ஜெர்மனி படைகளுடன் சேர்ந்து இந்திய விடுதலைக்காக போராடினார். 
1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி போர் விமானத்தில் ஜப்பான் நோக்கி அவர் சென்றுக்கொண்டிருந்த போது, கோளாறு காரணமாக விமானம் மலை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், நேதாஜி பலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இவரது மரணம் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த 1956ம் ஆண்டு ஷா நவாஸ் கமிட்டியும், 1999ம் ஆண்டு முகர்ஜி கமிஷனும் அமைக்கப்பட்டது. 2005ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட முகர்ஜி கமிஷன் அறிக்கையில், 1945ம் ஆண்டு நேதாஜியின் விமானம் எரிந்து விழுந்ததாக கூறப்படும் இடத்தில் அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. 

கடந்த 70 ஆண்டுகளாக நிலவி வரும் நேதாஜியின் மரணம் தொடர்பான மர்மமுடிச்சு, இதுவரை அவிழ்க்க முடியாத கல்முடிச்சாகவே இருந்து வருகிறது. 

இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் டெல்லியில் உள்ள 'மிஷன் நேதாஜி' என்ற அமைப்பு, பிரதமர் அலுவலகத்தில் இருந்து நேதாஜியின் மரணம் தொடர்பான 33 கோப்புகளின் நகலை கேட்டு மனு செய்திருந்தது. 

அந்த தகவல்களை அளித்தால் நட்பு நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவும், நாட்டின் இறையாண்மையும் பாதிக்கப்படும் என மத்திய அரசு கூறிவிட்டது. 

நேதாஜி, தற்போதைய மேற்கு வங்காள மாநிலத்தில் பிறந்தவர் என்பதால், அவரது மரணம் தொடர்பான தகவல்களை பெற்றுத்தரும்படி அவரது உறவினர்கள் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை கடந்த 2012-ம் ஆண்டில் கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து இதே கோரிக்கையுடன் மேற்கு வங்காள மாநில அரசையும், மத்திய அரசையும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதன் விளைவாக, நேதாஜி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் தலைமையக அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த 64 கோப்புகளை சமீபத்தில் மம்தா பானர்ஜி வெளியிட்டார். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து பணியாற்றி, பின்னர், காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசிவந்த டேப் நாத் தாஸ் என்பவரைப் பற்றிய போலீசாரின் உளவுத்தகவல்கள் மேற்கண்ட 64 கோப்புகளில் 22-ம் எண் கோப்பில் காணப்படுகிறது.

அவரது கருத்தின்படி,1948-ம் ஆண்டுவரை சீனாவின் மன்சூரியா பகுதியில் நேதாஜி உயிருடன் வாழ்ந்ததாகவும், இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மூன்றாம் உலகப்போர் வெடிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் இந்தியா மற்றும் சர்வதேச அரசியலின் போக்கை அவர் உன்னிப்பாக கவனித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், நேதாஜியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்களில் ஒருவரான சைபுத்தீன் என்கிற நிஜாமுதீன் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆசம்கர் மாவட்டத்தின் டக்கோவா கிராமத்தில் தற்போது வசித்து வருகிறார். தனக்கு 115 வயதாவதாக கூறும் நிஜாமுதீன், நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களில் ஒருபகுதி வெளியாகியுள்ள நிலையில் சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அந்த பேட்டியின்போது, கடைசியாக நேதாஜியை 1947-ம் ஆண்டு நான் சந்தித்தேன். அவரை ஒரு காரில் அழைத்துவந்து, பர்மாவின் சித்தான் நதியில் தயாராக இருந்த படகில் ஏற்றி வழியனுப்பி வைத்தோம். மிகவும் குறுகலான அந்த நதி, இந்திய எல்லையில் உள்ள கடலில் போய் கலக்கக் கூடியது. அங்கிருந்து அவரை எங்கோ அழைத்துச் செல்வதற்கு கடலில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் தயார் நிலையில் காத்திருப்பதாக கூறப்பட்டது. 

அவர் படகில் ஏறிச்சென்ற சில நிமிடங்களில், நேதாஜியை நாங்கள் அழைத்து வந்த கார் மீது அங்கு வந்த ஒரு போர் விமானம் குண்டு வீசித் தகர்த்துவிட்டு சென்றது. நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். என்னுடன் இருந்த சிலர் மரணம் அடைந்தார்கள் என்று தெரிவித்துள்ளார்.

1945-ம் ஆண்டு நேதாஜி இறந்து விட்டதாக அவரது வரலாற்றின் சந்தேகத்துக்குரிய பகுதி கூறுகின்றதே..? நீங்கள் 1947-ம் ஆண்டில் அவரை சந்தித்ததாக சொல்கிறீர்களே..? என்ற நிருபரின் கேள்விக்கு ‘இந்தியன்’ தாத்தா பாணியில் ஒரு மர்மப் புன்னகை உதிர்த்தபடி, பதில் அளித்த நிஜாமுதீன், ‘ஆமாம், அவர் மரணம் அடைந்து விட்டதாக வானொலியில் அப்போது வாசிக்கப்பட்ட செய்தியை எங்களுடன் சேர்ந்து அவரும் கேட்டுக்கொண்டிருந்தார்’ என்று தெரிவித்துள்ளார்.
maalaimalar.com

Post a Comment

0 Comments