தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே பாலம் கட்டுவதற்கு இந்தியா தயாராக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ராமேசுவரம் முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலும் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சாலை திறக்கப்படாத நிலையில் கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டது. இதனை வியாழக்கிழமை இந்தியா மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது,
''1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலின் காரணமாக மொத்தமாக தனுஷ்கோடி அழிக்கப்பட்டது. புயலுக்குப் பின்பு தற்போது அமைக்கப்பட்ட தனுஷ்கோடி சாலையைப் பயன்படுத்தி அரிச்சல்முனைக்குச் சென்று பக்தர்களால் நீராட முடியும். புதிய சாலை கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தற்போது சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாலை சரி செய்யப்பட்டு தனுஷ்கோடி சாலை விரைவில் திறக்கப்படும்.
தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே பாலம் கட்டுவதற்கு இந்தியா தயாராகவே உள்ளது. இலங்கை அரசாங்கம் ஒத்துக் கொண்டால் பாரதி கண்ட கனவு நினைவேறும்.
டெல்லியில் நடைபெற்ற மீனவப் பேச்சுவார்த்தையில் தமிழக, இலங்கை மீனவர்கள் இடையிலான பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்வதற்காக கூட்டு பணிக் குழு அமைக்கப்படும். இதில் இரு நாட்டு மீன்வளத்துறை அதிகாரிகள் மட்டத்திலான குழு 3 மாதங்களுக்கு ஒரு முறை கூடி, இருதரப்பிலும் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராயும்.
இரு நாட்டு அமைச்சர்கள் தரப்பிலான குழு 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தப்படும். இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான முதல் கூட்டம் வரும் 2017, ஜனவரி 2-ம் தேதி கொழும்பில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழக மீனவர்களின் 115 படகுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
0 Comments