சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே இனமுறுகலை ஏற்படுத்தி வன்முறையைத் தூண்டும் வகையில் செயற்படும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரையும் அவரோடு இயங்கும் இனவாதக் குழுக்களையும் கைது செய்வதற்கு அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பமான பொதுபலசேனா அமைப்பு, முஸ்லிம்களுக்கெதிரான மிக மோசமான வன்முறைகளை அரங்கேற்றியது. மஹிந்த அரசு பொதுபலசேனாவின் இந்த மோசமான செயற்பாட்டை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமல்லாமல் அவர்களின் இனவாத வன்முறை செயற்பாட்டுக்கு மறைமுகமாக அங்கீகாரத்தையும் வழங்கியது.
முஸ்லிம்களுக்கு பலத்த சேதங்களையும், அழிவுகளையும் ஏற்படுத்திய அளுத்கம, பேருவளை கலவரங்களுக்கு காரண கர்த்தாவாகிய ஞானசார தேரர்மீது அப்போதைய மஹிந்த அரசு எவ்வித சட்ட நடவடிக்கையையும் எடுக்கவில்லை. கைது செய்யப்படுவதற்கான தகுந்த ஆதாரங்கள் இருந்தும், ஞானசார தேரர் அன்று கைது செய்யப்படவுமில்லை. இன்று கூட ஞானசார தேரருக்கு எதிராக பல முறைப்பாடுகள் காவல்துறையிடம் பதியப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் பொலிஸார் மேற்கொள்வதாகத் தெரியவில்லை.
நாட்டில் சட்டம் சகலருக்கும் சமம் என்று போதிக்கப்படுகிறது. ஆனால் பொதுபலசேனா அமைப்பினரின் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளை தட்டிக்கேட்பதற்கோ, தடுத்து நிறுத்துவதற்கோ அந்த அமைப்பிற்கு எதிராக சட்டங்களை அமுல் படுத்துவதற்கோ இன்றும் கூட தயக்கம் காட்டப்படுகின்றமையே உணர முடிகிறது.
பௌத்த பிக்குகள் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களின் அட்டகாசங்களை காவல்துறையினர் பார்த்துக்கொண்டு பாராமுகமாய் இருக்கின்றனர். காவல்துறையின் பொடுபோக்குத்தனமான இந்த செயற்பாடு, சட்டத்தின் நம்பகத்தன்மை நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதையே எடுத்துக்காட்டுகிறது. பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும் பௌத்த பிக்கு மாணவர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் இனவாத ரீதியில் செயற்படும் பௌத்த பிக்குகளை பொலிஸார் ஒரு போதும் தாக்கவோ கைது செய்யவோ முற்படுவதில்லை.
சிறுபான்மை மக்களை சீண்டும் தனது இனவாத சேட்டையை ஞானசார தேரரோடு இணைந்து மட்டக்களப்பு அம்பிட்டியே சுமணரத்ன தேரரும் ஆரம்பித்திருக்கின்றார். ஞானசார தேரர் இஸ்லாம் தொடர்பாகவும், முஸ்லிம்கள் தொடர்பாகவும், இஸ்லாமிய நம்பிக்கைகள் தொடர்பாகவும் மிக மோசமான வெறுக்கத்தக்க கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இந்த விஷமத்தனமான கருத்துகள் மூலம் இனமுறுகல் ஒன்றுக்கு தூபமிட்டும் வருகிறார்.
நீதிமன்றத்திற்கும், சட்டத்துக்கும் கட்டுப்படாத இவரின் மோசமான செயற்பாடு இந்த நாட்டை மீண்டும் இனவாத வன்முறை என்ற அழிவுப் படுகுழிக்குள் தள்ளப்போகிறது.
ஞானசார தேரரும் அவரோடு இயங்கும் தீவிர இனவாத குழுவினரும் மட்டக்களப்புக்கு ஊர்வலமாக செல்வதை தடுத்து, நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்தது. சட்டத்தை துச்சமாக மதித்து செயற்படும் ஞானசார தேரர், நீதிமன்ற கட்டளையை அவமதித்தது மட்டுமல்லாமல்; காவல் துறையினர் முன்னிலையில் நீதிமன்ற ஆணையைக் கிழித்தெறிந்து சட்டத்தை அவமதிக்கும் செயலை பகிரங்கமாகவே செய்துள்ளார். பொலிஸார் இதற்காக எந்த நடவடிக்கையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.
கடந்த தேர்தலில் நாட்டை சுமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் பால் இட்டுச்செல்வதற்கான நல்லாட்சியின் வாக்குறுதியை சீர்குலைக்கும் வகையிலேயே ஞானசாரதேரரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இனவாhதத்தை தோற்கடிக்கும் நோக்கில் உருவான நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றியை கேள்விக் குறியாக்கும் இனவாதிகளின் இந்த நடவடிக்கையை அரசாங்கம் மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. குற்றம் இழைப்பவர்களை கைது செய்வதற்கு பொலிஸாருக்கு ஜனாதிபதியினதோ பிரதமரினதோ அல்லது பொலிஸ் மாஅதிபரினதோ அனுமதி தேவையில்லை.
இனவாதிகள் இழைக்கும் குற்றங்கள் தொடர்பாக காவல்துறையினர் அசமந்தமாக செயற்படுவது தொடர்பாக நல்லாட்சி அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும். சட்டங்களுக்குக்கோ, நீதி நியாயங்களுக்கோ கட்டுப்படாமல், இனங்களுக்கிடையே வன்முறையைத் தூண்டி வரும் ஞானசார தேரரையும் அவரோடு இயங்கும் இனவாத குழுக்களையும் உடனடியாக கைது செய்து சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட அரசாங்கம் முன்வர வேண்டும்.
குற்றம் இழைப்பவர்கள் யாராகினும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை வழங்க வேண்டும். சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் முஜீபுர் றஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments