Ticker

6/recent/ticker-posts

மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் விவகாரம்! அரசாங்கத்தின் சிறந்த பாடசாலை திட்டத்தோடு இணைந்து செயற்பட சர்வதேச மேமன் சங்கம் இணக்கம்!

கொழும்பு தாருஸ்ஸலாம் வித்தியாலய அபிவிருத்தி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான், சர்வதேச மேமன் சங்க உறுப்பினர்கள், தாருஸ்ஸலாம் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் எஸ்.எஸ்.டீ. எப் அமைப்பின் தலைவர் பவ்சுல் ஹமீட் ஆகியோருக்கு இடையில் கருத்து பரிமாறல் நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றது.
 பல மாதங்களாக பெரும் சர்ச்சையாய் தொடர்ந்து வந்த இந்த விவகாரம் நேற்றைய கலந்துரையாடலின் பின்னர், முக்கிய தரப்பினரிடையே தெளிவை ஏற்படுத்தியதுடன் அரசாங்க, மற்றும் தனியார் நிதியுதவியினால் ஆரம்பமாகவிருக்கும் வேலைத் திட்டங்களை இணைந்து செயற்படுத்துவதற்கான சூழலையும், சுமுக நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தக் கலந்துரையாடல் சர்வதேச மேமன் சங்க உறுப்பினர் அனீஸ் சத்தார் மற்றும் ஊடகவியலாளர் ஹில்மி அஹ்மத் ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில் பொரல்லையில் இடம்பெற்றது.

தற்போது தாருஸ்ஸலாம் வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் அரசாங்கத்தின் அருகிலுள்ள சிறந்த பாடசாலை திட்டத்தோடு இணைந்து தமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க சர்வதேச மேமன் சங்கம் தனது பூரண சம்மதத்தையும்; தெரிவித்துள்ளது. 

இந்தக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் அரசாங்கத்தின் அருகிலுள்ள சிறந்த பாடசாலை திட்டத்தோடு சர்வதேச மேமன் சங்கத்தின் அபிவிருத்திப் பணியை இணைத்து செயற்படுத்துவதில்  தமக்கு எவ்வித முரண்பாடும் இல்லையென்று எடுத்துக் கூறினார்.

அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணியை நிறுத்தி விட்டு, சர்வதேச மேமன் சங்கத்தின் வேலைத்திட்டத்தை மாத்திரம் தாருஸ்ஸலாமில் முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சிலர் செயற்பட்டதையும் முஜீபுர் றஹ்மான் சுட்டிக்காட்டினார். இவர்கள்; தாருஸ்ஸலாமிற்கு இவ்வருடம் அரசாங்கத்தால்  ஒதுக்கப்பட்ட 7 கோடி ரூபாய் நிதியுதவியை நிறுத்துமாறு எழுத்து மூலம் கல்வியமைச்சரிடம் கோரிக்கை விட்டதே இந்த சர்ச்சைக்கு அடிப்படைக் காரணம் என்றும் முஜீபுர் றஹ்மான் விளக்கமளித்தார்.

தாருஸ்ஸலாம் பாடசாலைக்கு கிடைக்கும் எந்த தனியார் நிதியுதவியையும் இல்லாமலாக்குவதற்கு தான் ஒரு போதும் செயற்படவில்லையென்றும் அவர் இந்தக் கலந்துரையாடலில் உறுதிபடக் கூறினார்.

காரசாரமான விவாதங்களோடு அரம்பமான இந்தக் கலந்துரையாடல் இறுதியில் சுமுகமான நிலையை எட்டியது. அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத் திட்ட செயற்பாடுகளோடு இணைந்து தமது வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதில் கசல தரப்பினரிடையேயும் ஒரு உடன்பாடு ஏற்பட்டது.
தொடரவிருக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக சர்வதேச மேமன் சங்கம், எஸ்எஸ்டீஎப், முஜீபுர் றஹ்மான் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றும் விரைவில் கைச்சாத்தாக உள்ளது. 

Post a Comment

0 Comments