வடகொரியாவின் அணுஆ யுதங்கள் இன்னும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி இருப்பது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மேலும் அணு ஆயுதங்களை வைத்திருந்ததற்காக அந்நாட்டின் மீது விதித்த தடையை ட்ரம்ப் வெள்ளிக்கிழமை நீட்டித்திருக்கிறார்.
இதுகுறித்து அந்நாட்டு நாடாளுமன்றம் வெளியிட்ட அறிக்கையில், ”கொரிய தீபகற்பத்தில் இருக்கும் அணு ஆயுதங்களால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. மேலும் பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கைகளுக்கு வடகொரியா இன்னமும் அசாதரண அச்சுறுத்தலாகவே இருக்கிறது" என்று தெரிவித்துள்ளது.
வடகொரியா தொடர்ந்து உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனை நடத்தி வந்தது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே மிகவும் கடுமையான வார்த்தை மோதல் நடந்தது.
இரு நாடுகளும் தங்கள் ராணுவ பலம் மற்று அணு ஆயுத பலத்தை ஒப்பிட்டு வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். மேலும் அமெரிக்கா தென்கொரியாவுடன் இணைந்து ராணுவப் பயிற்சியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஈடுபட்டது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவியது. அத்துடன் வடகொரியா மீது ஐ.நா. சபை பொருளாதாரத் தடை விதித்தது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக ட்ரம்பும் - கிம்மும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் நேற்று முன்தினம் சிங்கப்பூரில் கேபெல்லா ஓட்டலில் ஜூன் 12 ஆம் தேதி சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது.இதனைத் தொடர்ந்து அமெரிக்கா திரும்பிய ட்ரம்ப் வடகொரியாவிடமிருந்து அணு ஆயுதங்கள் குறித்த எந்த அச்சுறுத்தலும் இருக்காது என்று பதிவிட்டுருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் வடகொரியாவின் அணு ஆயுதங்களால் அசாதரண அச்சுறுத்தல் இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. tamil.thehindu.com
0 Comments