
ஜி-20 நாடுகள் என்பது உலகின் பொருளாதாரத்தில் 90 சதவீதத்தைக் கொண்டுள்ள 20 நாடுகள் கொண்ட கூட்டமைப்பை ஜி-20 நாடுகளாகும். 80 சதவீத உலக வர்த்தகம், மூன்றில் ஒருபகுதி மக்கள் தொகை என் உலகின் பாதியைக் கொண்டிருக்கும் நாடுகளாகும்.
இந்த ஜி-20 அமைப்பில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியுனோஸ் அயர்ஸ் நகரில் ஜி-20 நாடுகள் மாநாடு கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்றிருந்தார்.
இந்த மாநாட்டின் இடையே ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங், ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரான்ஸ் அதிபர் ஆகியோரைச் சந்தித்த பிரதமர் மோடி அவர்களுடன் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சு நடத்தினார்.
ஜி-20 நாடுகள் மாநாடு நேற்று முடிந்தநிலையில் அடுத்த மாநாடு இந்தியாவில் நடைபெறும் என்பதைப் பிரதமர் மோடி அறிவித்தார்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், “ இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் 2022-ம் ஆண்டு ஜி-20 நாடுகள் மாநாட்டை இந்தியா நடத்துகிறது. 2022-ம் ஆண்டு எங்களுக்கு மிகச்சிறப்பான ஆண்டு, அந்த மாநாட்டுக்கு வரும் நாடுகள் அனைத்தையும் வரவேற்கிறோம். உலகின் மிகவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்டுள்ள இந்தியாவுக்கு வாருங்கள். இந்தியாவின் உயர்ந்த வரலாறு, பன்முகத்தன்மை, இந்தியாவின் விருந்தோம்பல் ஆகியவற்றை அனுபவியுங்கள் “ எனத் தெரிவித்துள்ளார். tamil.thehindu.com
x
0 Comments