( ஐ. ஏ. காதிர் கான் )
போலியான தீவிரவாத குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சலன் கவாஜாவை, அவுஸ்திரேலியப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கைப் பிரஜை கமர் நிசாம்தீன் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ள முயற்சிப்பதாக, போலி ஆவணங்களைத் தயாரித்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமை தொடர்பிலேயே, குறித்த நபர் நேற்று முன் தினம் அவுஸ்திரேலியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலியான ஆவணங்களைத் தயாரித்து, நீதியை திசைதிருப்ப முயன்ற காரணத்தினால், பரமட்டா நீதிபதி சந்தேக நபருக்கு பிணை வழங்க மறுத்துள்ளார்.
அத்துடன், இந்தச் சம்பவம் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு விடயம் என, அவுஸ்திரேலிய பொலிஸ் உதவி ஆணையாளர் மைக் வில்லிங் தெரிவித்துள்ளார். குறித்த விசாரணைகள் மூலம், அவுஸ்திரேலிய சமூகத்திற்கு எந்தவித ஆபத்துக்கள் இருப்பதாகத் தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில், இலங்கைப் பிரஜை நிசாம்தீன் திட்டமிட்ட முறையில் சிக்கவைக்கப்பட்டு கைது செய்யப்பட்டமை குறித்தும், பொலிஸ் உதவி ஆணையாளர் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
தனிப்பட்ட கோபங்களின் காரணமாகவே, கமர் நிசாம்தீனை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் சகோதரர் சிக்க வைத்துள்ளதாகவும், பெண் விவகாரமே இதற்குக் காரணமா என்பது குறித்தும், தற்போது ஆராயப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிட்னி பல்கலைக்கழகத்திலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புப் புத்தகத்தின் அடிப்படையில், அவுஸ்திரேலிய அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டார் என, கமர் நிசாம்தீன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அந்தக் குறிப்புப் புத்தகத்திலுள்ள கையெழுத்துக்கள் நிசாம்தீன் உடையவை அல்ல என்று நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவர் அவுஸ்திரேலியப் பொலிஸாரினால் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments