( ஐ. ஏ. காதிர் கான் )
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு, ஐக்கிய தேசியக் கட்சி சட்டத்தின் உதவியைப் பெறச் சென்றாலும், நாட்டில் மக்களின் ஆதரவு மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கே உள்ளதென, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட தலைவர், கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நேற்று முன் தினம் (04), பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தற்காலிக தடையே தவிர, அமைச்சரவை அமைச்சர்களையோ பிரதமரையோ நீக்கும் செயலல்ல. அமைச்சுக்களின் அதிகாரிகள் குறிப்பிட்ட அமைச்சுக்களின் நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொண்டு வருவதாகவும் பிரசன்ன ரணதுங்க இதன்போது தெரிவித்தார்.
இப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு, பொதுத் தேர்தலே. ஐக்கிய தேசியக் கட்சி சட்டத்தின் ஆதரவைப் பெறச்சென்றாலும், மக்களின் ஒத்துழைப்பு மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அணியினருக்கே உள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
யார் என்ன சொன்னாலும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு முக்கிய தீர்வு, பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதேயாகும். நாட்டின் நிலையற்ற தன்மை, மக்களின் நிலையற்ற தன்மையாகவே கருதப்படும் என்றும், கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ என்னும் தலைவருக்கு இது பெரிய பிரச்சினையொன்றல்ல எனவும், ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரு சிலர் இந்த நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் செயற்படும் விதம் குறித்து, தான் கவலையடைவதாகவும் அவர் மேலும் விளக்கமளித்தார்.
0 Comments