Ticker

6/recent/ticker-posts

கவிதைகளை போர் முழக்கங்களாக மாற்றியவர் கவிஞர் இன்குலாப்!

எளிமையான கவிதைகளால் மக்களின் விடுதலைக்காக பாடுபட்ட மக்கள் கவிஞர் இன்குலாபின் நினைவு தின ஆக்கம்.   அறச்சீற்றத்தோடு இவர் படைத்த கவிதைகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் மட்டுமின்றி தமிழ்ச் சமூகத்திலும் நிலைத்து நிற்கின்றன. இன்குலாப்பின் நினைவு நாளில், அவரது வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்போம்.
எழுத்துக்களை தீப்பந்தங்களாக மாற்ற முடியுமா? கவிதைகள் போர் முழக்கமாக திகழமுடியுமா? ஆம். இன்குலாப்பின் கவிதைகள், கொடுமைகளுக்கு எதிராக மக்களை உசுப்பி விட்டு, வீதியில் இறங்கி போராடும் ஆற்றல் கொடுத்தவை. 60-களின் பாதியில், தமிழ் இளைஞர்களுக்கு இந்தி எதிர்ப்பு போராட்டம் அரசியல் அறிவைக் கொடுத்ததைப் போலவே இன்குலாப்பையும் வீதியில் இறக்கியது. தனது நண்பர், நா.காமராசோடு இணைந்து இவர் பாடிய கவிதைகள், இந்தி எதிர்ப்புக்கு எதிராக இளைஞர்களை அணி திரளச்செய்தது. 
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈர்க்கப்பட்ட பலர் 1967 ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு அதிகார அமைப்பின் ஆதரவாளர்களாகத் தேங்கிப் போயினர். ஆனால், இன்குலாப்போ அதிகார ஆசைக்காக தன் லட்சியத்தைத் துறக்காமல் தொடர்ந்து எழுத்துக்களின் மூலம் புரட்சியை விதைத்தார். 
1970 களின் முற்பகுதியில் உருவெடுத்த வானம்பாடி கவிதை இயக்கத்தில் ஒருவராகத் துவக்கத்தில் அறியப்பட்ட இன்குலாப் மிகக் குறுகிய காலத்திலேயே அதிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டார். 
பெண் விடுதலை, தலித் விடுதலை என இவர் பாடிய ஒவ்வொரு கவிதைகளும் நுனிப்புல் மேய்பவையாக இல்லாமல், பிரச்சனையின் ஆழங்களை உழுதுபார்த்தவை. 
இன்குலாப் எழுதிய கண்மணி ராஜம் என்னும் கவிதை, திமுக - அதிமுக உயர் மட்ட தலைவர்களை கடுமையாக விமர்சித்ததால், பாடத்திட்டத்திலிருந்தும் நீக்கப்பட்டு பெரும் சர்ச்சையை தமிழகத்தில் எழுப்பியது. ராஜராஜ சோழனின் ஆயிரமாவது பிறந்த நாளை தமிழக அரசு விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு செய்தபோது அதை விமர்சித்து இன்குலாப் எழுதிய ’ராஜராஜேச்சுவரம்’ கவிதையும் போராட்டங்களுக்குத் தூண்டுகோலானது. 
கீழ்வெண்மணியில் 44 தலித் மக்கள் எரிக்கப்பட்டபோது வெகுண்டெழுந்து இவர் இயற்றிய கவிதைகள், ஒடுக்கப்பட்ட மற்றும் உழைக்கும் மக்களுக்கு இன்று வரை புரட்சிகீதமாக முழங்குகிறது.  மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா என்ற இவரின் புகழ் பெற்ற பாடல், இன்றும் பட்டி தொட்டியெல்லாம் போராடும் மக்களின் உணர்வுகளை உசுப்பிவிடுகிறது. 
தன் வாழ்க்கையை முழுவதுமாக சமூகத்திற்காக மட்டுமே வாழ்ந்து காட்டிய மாபெரும் படைப்பாளி இன்குலாப்....  மகாகவி பாரதியாருக்கு பிறகு, எந்த விதமான சமரசமும் இன்றி மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இவர் படைத்த கவிதைகள் தமிழ் சமூகத்தின் கிரீடங்களில் வைரங்களாக மின்னுகின்றன. 
இவரின் இறப்புக்கு பிறகு சாகித்ய அகாடமி இவரது படைப்புகளை கவுரவிக்கும் வகையில், விருது அளித்து கவுரவித்தது. விருதுகளை இன்குலாப் புறக்கணிப்பதை பாடமாய் கற்றுக்கொண்ட இவரது குடும்பம், அந்த விருதையும் ஏற்க மறுத்தது வரலாறு. எப்போதும் தான்கொண்ட கொள்கையில் சமரசமின்றி வாழ்ந்து மக்கள் நலனுக்காக உழைத்த மகாகவியாகவே இன்குலாப் திகழ்கிறார். நன்றி : ns7.tv

Post a Comment

0 Comments