திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலை விவகாரம் தொடர்பாக இன்று 4வது நாளாக கலவரம் நீடிக்கிறது. இதில் பாஜ எம்பி, சிபிஎம் எம்எல்ஏ உள்பட 4 அரசியல் பிரமுகர்கள் வீடுகள் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டன.
இதுதவிர ஒரு சிபிஎம் தொண்டர் வெட்டப்பட்டுள்ளார். இதனால் அந்த மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது.
சபரிமலையில் கடந்த 2ம் தேதி அதிகாலை பிந்து, கனகதுர்கா என்ற 2 இளம்பெண்கள் தரிசனம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்று முதல் கேரளா முழுவதும் பயங்கர கலவரம் நீடித்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த 3ம் தேதி பாஜ சார்பில் பந்த் நடத்தப்பட்டது. அன்றும் அனைத்து மாவட்டங்களிலும் பயங்கர வன்முறை வெடித்தது.
100க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள், போலீஸ் வாகனங்கள் சிபிஎம், சிபிஐ, பாஜ, ஆர்எஸ்எஸ் உள்பட கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. 50க்கும் மேற்பட்ட கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
ஒரு பாஜ தொண்டர் உள்பட 3 பேர் பலியானார்கள். இந்தநிலையில் இன்று 4வது நாளாக கேரளாவில் கலவரம் நீடிக்கிறது.
இதனிடையே நேற்று முதல் கண்ணூர் மாவட்டத்தில் பயங்கர கலவரம் வெடித்து உள்ளது. நேற்று மாலை கண்ணூர் திருவெங்காட்டில் உள்ள ஆர்எஸ்எஸ் பிரமுகர் சந்திரசேகர் வீடு சூறையாடப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இரவு 10 மணியளவில் தலச்சேரி சிபிஎம் எம்எல்ஏ ஷம்சீர் வீடுகளில் 2 குண்டுகள் வீசப்பட்டன. சிறிது நேரத்திலேயே தலச்சேரியில் உள்ள சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ சசி வீட்டிலும் குண்டுகள் வீசப்பட்டன.
தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் பாஜ எம்பி முரளீதரன் வீட்டிலும் குண்டுகள் வீசப்பட்டன.
தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் பாஜ எம்பி முரளீதரன் வீட்டிலும் குண்டுகள் வீசப்பட்டன.
அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் கண்ணூர் மாவட்டத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை கண்ணூர் இருட்டியை சேர்ந்த சிபிஎம் தொண்டர் விஷாக் என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியது.
மேலும் கோழிக்கோடு பேராம்புராவில் ஒரு சிபிஎம் தொண்டர் ராதாகிருஷ்ணன் வீடு மீது குண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுபோல் மலப்புரம் பாஜ தொண்டர் கடையை அதிகாலை ஒரு கும்பல் சூறையாடியுள்ளது.
தமிழ் முரசு
0 Comments