கிழக்கு மாகாண ஆளுநர் நியமன விடயத்தில் தமிழ் தலைமைகள் அண்மையில் தொடர்ச்சியாக எடுத்த முடிவுகளே காரணம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டமை குறித்து இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது, “கடந்த வருடம் இடம்பெற்ற அரசியல் பிரளயத்தை அடுத்து ஜனாதிபதி எடுத்த தீர்மானங்களுக்கு தமிழ் தலைமைகள் முட்டுக்கட்டையாக இருந்துள்ளன.
அதிலும், ஜனாதிபதி தன்னுடைய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாவிடினும் எதிர்க்க வேண்டாம் என்று கூறியும் தமிழ் தலைமைகள் அதனை எதிர்த்தன.
ஒருவேளை இதன் பிரதிபலிப்பாகவே இன்று ஜனாதிபதி இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுத்தாரா? என்ற கேள்வி எழுகிறது.
உண்மையிலேயே இன்று கிழக்குத் தமிழர்களின் இருப்பு என்பது கேள்விக்குள்ளான நிலையிலேயே இருக்கிறது. இதற்கு தமிழ் தலைமைகளே பதில்சொல்ல வேண்டும்.
தமிழ் தேசியம் என்று மாத்திரம் பேசிக்கொண்டிருந்தால் அது எமது மக்களுக்கு முழுமையான தீர்வைத் தராது. உரிமை சார்ந்த அரசியலுடன் எமது மக்கள் தினமும் அனுபவிக்கும் பிரச்சினைகள் குறித்து சிந்திக்க வேண்டும்.
கிழக்கில் இன்று எத்தனையோ அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை தமிழர்களுக்கு கிடைப்பது என்பது எட்டாக்கனியாகவே இருந்துள்ளது. இதை எவ்வாறு எமது மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடியும் என்பதை பற்றி சிந்திக்கவேண்டும்.
நாம் அரசியல் ரீதியாக ஒரு கல் எறிந்தால் நம்மை பல கற்கள் கொண்டு தாக்கும் அளவுக்கு தென்னிலைங்கை மாறியிருக்கிறது. இதற்கு தமிழ் தலைமைகள் எடுக்கின்ற பல தீர்மானங்களே காரணமாகவுள்ளது.
எனவே, இனிவரும் காலங்களிலாவது கிழக்கு தமிழர்களின் இருப்பு குறித்து கூட்டமைப்பு உட்பட தமிழ் தலைமைகள் நினைவில் வைத்து செயற்படும் என நான் நினைக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
0 Comments