இந்த வருடத்துக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு ஹஜ் விண்ணப்பதாரிகளில் பெரும்பான்மையினர் ஆர்வமற்றவர்களாக இருக்கிறார்கள்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஹஜ் கடமையினை மீள கையளிக்கக்கூடிய பதிவுக் கட்டணமாக 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி தங்களது பயணத்தை உறுதி செய்யுமாறு 3000 விண்ணப்பதாரிகளுக்கு கடிதங்களை அனுப்பி வைத்திருந்தது. பயணத்தை உறுதி செய்வதற்கான இறுதித் தினம் ஜனவரி 3 ஆம் திகதி எனவும் தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை சுமார் 700 விண்ணப்பதாரிகளே தங்களது பயணத்தை உறுதி செய்துள்ளனர். இவ்வருடம் இலங்கைக்கு 3000 ஹஜ் கோட்டா கிடைக்கவுள்ளது. மேலும் மேலதிகமாக 1000 கோட்டா பெற்றுக்கொள்வதற்கு அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் சவூதி ஹஜ் அமைச்சருடன் சவூதியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஹஜ் விண்ணப்பதாரிகள் ஹஜ் பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் குன்றியவர்களாக இருக்கும் நிலையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நிலுவையிலுள்ள விண்ணப்பதாரிகள் அனைவருக்கும் 14741 பதிவிலக்கம் வரை ஹஜ் பயணத்தை உறுதி செய்யும்படி கோரி கடிதங்கள் அனுப்பி வைக்கவுள்ளது. ஹஜ் பயணத்தை 25 ஆயிரம் ரூபா மீள கையளிக்கக்கூடிய பதிவுக்கட்டணம் செலுத்தி உறுதிப்படுத்தும் விண்ணப்பதாரிகளில் இவ்வருடம் ஹஜ் கடமைக்காக பதிவு எண் வரிசைக் கிரமப்படி பயணிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். கோட்டாவுக்கும் மேலதிகமாக பயணிகள் உறுதி செய்தால், எஞ்சியவர்கள் அடுத்த வருடம் பயணத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இதேவேளை கடந்த வருடம் தங்களது பயணங்களை உறுதி செய்த பயணிகளில் 760 பேர் பயணம் மேற்கொள்வதற்கு வாய்ப்புக் கிட்டவில்லை. அவர்கள் இவ்வருட ஹஜ் கடமையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள். இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளவர்கள் தாமதியாது பதிவுக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி தங்களது பயணங்களை உறுதி செய்து கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலீக் வேண்டியுள்ளார்.
-Vidivelli
-Vidivelli
0 Comments